நடிகர்கள் தொடர்ந்து பல மோசடி புகார்களில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக மோசடி செய்யும் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்ததற்காக பெரிய அளவில் பணம் சம்பளமாக பெறப்பட்டது குறித்து அதிகாரிகள் நடிகர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நில மோசடி புகார் ஒன்றில் தெலுங்கு திரைத்துறையின் முன்னணி நடிகரான மகேஷ்பாபுவும் சிக்கியுள்ளார்.
சாய் சூர்யா டெவலப்பர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பர தூதராக மகேஷ் பாபு பணியாற்றி வருகிறார். இந்நிறுவனம், மகேஷ் பாபுவின் படத்தை காட்டி அங்கீகரிக்கப்படாத மனைகளை விற்று மோசடியில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பாதிக்கப்பட்டவர்கள், ரங்காரெட்டி மாவட்ட நுகர்வோர் ஆணையத்தை அணுகியதையடுத்து, சாய் சூர்யா டெவலப்பர்ஸ், அதன் உரிமையாளர் காஞ்சர்லா சதீஷ் சந்திரகுப்தா மற்றும் மகேஷ் பாபு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்களின் புரமோசனில் ஈடுபட்டதற்காக நடிகர் மகேஷ் பாபுவுக்கு ரூ.3.4 கோடி வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வருகிற 8-ம் தேதிக்குள் நுகர்வோர் மன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
