90ஸ் கிட்ஸ்களின் சூப்பர் ஹீரோவான ’சக்திமான்’ கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
1990-களில் முகேஷ் கன்னா நடித்த ’சக்திமான்’ என்ற தொடரானது அன்றைய காலகட்டத்தில் மிகவும் பிரபலமான தொடர். 90ஸ் கிட்ஸ்களின் முதல் சூப்பர் ஹீரோ என்றால் அது சக்திமான் தான். அவரது சிகப்பு கலரில் தங்கநிற சக்கரம் போன்ற டிசைன் பொறித்த ஆடையை வாங்குவது என்பது அன்றைய குழந்தைகளின் கனவாகனவே இருந்திருக்கும்.
அந்த தொடரை படமாக்கும் முயற்சியில் இன்றைய இயக்குநர்கள் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். 2022-ம் ஆண்டு ’சக்திமான்’ படத்தை எடுக்க இருப்பதாக சோனி பிக்சர்ஸ் அறிவித்தது. சக்திமான் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிப்பார் எனவும் பேசப்பட்டது. அதனை தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது முகேஷ் கன்னா மறுத்திருந்தார். இந்த நிலையில், புஷ்பா படம் மூலம் பான் இந்தியா நடிகராக மாறியுள்ள அல்லு அர்ஜூன் சக்திமான் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் 2021-ம் ஆண்டு வெளியான ’மின்னல் முரளி’ படத்தை இயக்கிய பசில் ஜோசப் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகராக பிசியாக வலம் வரும் பசில் ஜோசப், சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் மூலம் நேரடியாக தமிழிலும் அறிமுகமாவுள்ளார். அதேப் போல அல்லு அர்ஜூன் அட்லீ இயக்கத்தில் ’AA22*A6’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ரூ.700கோடியில் சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக எடுக்கும் இப்படத்தில் தீபிகா படுகோனும் நடிக்கிறார். இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட்டாகி இருந்தார் அல்லு அர்ஜூன். இயக்குநருடன் ஏற்பட்ட மனக்கசப்பால், அப்படத்தில் இருந்து விலகிய அல்லு அர்ஜூன், பசல் ஜோசப்புடன் இணைந்து சக்திமான் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.