சினிமாவை உயிருக்கு உயிராக ஏவிஎம் சரவணன் நேசித்தார் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் இன்று காலை காலமானார். அவரின் உடல், சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரைத்துறையினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் நேரில் வந்து ஏவிஎம் சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுக்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் பேசுகையில், “அவர் திரைத்துறையை மிகவும் நேசித்தார். நான் ஏவிஎம் தயாரிப்பில் 9 திரைப்படங்கள் நடித்துள்ளேன். அவை அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றன. இதில் முரட்டுக்காளை உள்ளிட்ட படங்களும் அடங்கும்.
என் கஷ்ட காலங்களில் எனக்குத் துணையாக இருந்தவர். உடையிலும் உள்ளத்திலும் வெண்மையானவர். என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். என் நலன்விரும்பி.
அவருடைய மறைவு திரைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்றார் ரஜினிகாந்த்.
விசால் அஞ்சலி: ஏவிஎம் சரவணனின் உடலுக்கு நடிகர் விசாலும் அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேட்டியளித்த அவர், ஏவிஎம் சரவணனின் இழப்பு திரைத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு என விசால் கூறினார்.
