தனது 50 ஆண்டுகால திரையுலகப் பயணத்தை நிறைவு செய்யும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
1975-ம் ஆண்டு அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ரஜினிகாந்த். அதனை தொடர்ந்து, வில்லன், ஹீரோ என சமீபத்தில் வெளியான கூலி வரை, கிட்டத்தட்ட 50 ஆண்டு காலத்தில் 171 படங்கள் நடித்து சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தன்னிடத்தே வைத்துள்ளார் ரஜினிகாந்த்.
தமிழ் சினிமாவில் 50 ஆண்டு காலத்தை நிறைவு செய்யும் ரஜினிகாந்திற்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”அனைவருக்கும் 79வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
எனது 50 ஆண்டு கால திரையுலகப் பயணத்தை ஒட்டி என்னை மனமார வாழ்த்திய என் நண்பரும் தமிழக முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், நண்பர் அண்ணாமலை, சசிகலா அம்மையார், தினகரன், பிரேமலதா அம்மையார் மற்றும் பல அரசியல் நண்பர்களுக்கும் கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன்லால், வைரமுத்து, இளையராஜா உள்ளிட்ட அனைத்து திரையுலக நண்பர்களுக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.