பல தடைகளுக்கு பிறகு வெற்றிகரமாக இன்று திரைக்கு வந்துள்ள பராசக்தி திரைப்படம் எப்படி இருக்கு என்பதை பார்ப்போம்.
கடந்த 2024ம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே விமர்சனங்கள் வர தொடங்கின. கேவிஎன் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் நடித்துள்ள பராசக்தி பொங்கல் கொண்டாட்டமாக இன்று திரைக்கு வந்துள்ளது.
நேற்றுவரை சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் பராசக்தி ரிலீசாகுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனாலும், இந்தி அரக்கி, தீ பரவட்டும் உள்ளிட்ட வசனங்கள் காட்சிகள் என கிட்டத்தட்ட 23 இடங்களில் காட்சிகள் நீக்கம் செய்த பிறகு பராசக்திக்கு சென்சார் போர்டு சான்றிதழை வழங்கியது. இதனால் அறிவித்தப்படி பராசக்தி திரைக்கு வந்தது.
ஏற்கெனவே சொன்ன மாதிரி 1965 காலக்கட்டத்தில் நடந்த மொழி பிரச்சனையை மையப்படுத்தியே பராசக்தி எடுக்கப்பட்டுள்ளது. புறநானூர் என்ற பெயரில் மாணவர் புரட்சி படை நடத்தி வரும் சிவகார்த்திகேயன், இந்தி போராட்டங்களை நடத்துகிறார். அப்போது ரயில் மறிப்பு போராட்டத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் ரவி மோகனுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் மோதல் ஏற்படுகிறது.
தாய் மொழிக்காக போராடும் சிவகார்த்திகேயனுக்கு பெரிய இழப்பு ஒன்னு வர சைலண்ட் மோடுக்கு சென்று விடுகிறார். இப்படியே சில ஆண்டுகள் போகிறது. அடுத்ததாக சிவகார்த்திகேயனை போல் அவரது தம்பி அதர்வாவும் இந்தி திணிப்புக்கு எதிராக போர்க்கொடி தூக்கிறார்.
இந்த சூழலில் முதலமைச்சருக்கு எதிராக கருப்பு கொடி காட்டும் சிவகார்த்திகேயன் அண்ட் கோவுக்கும், அதை தடுக்க வரும் போலீஸ் அதிகாரியான ரவி மோகனுக்கும் மீண்டும் மோதல் ஏற்படுகிறது. கடைசியில் யார் யாரை வென்றது, எந்த மொழி வென்றது என்பதே படத்தின் கிளைமாக்ஸாக உள்ளது.
புரட்சி, எதார்த்தம் என சிவகார்த்திகேயனை கேரக்டருக்கு ஏற்றவாறு நடிக்க வைத்துள்ளார் சுதா கொங்கரா. அந்த காலத்து நிகழ்வுகளை எதார்த்தமாக கண் முன் கொண்டு வந்த சுதா கொங்கராவின் டைரக்ஷன் பாராட்ட வைக்கிறது. சிவகார்த்திகேயன் மட்டுமில்லாம், அவரை எதிர்க்கும் வில்லன் ரோலில் நடித்துள்ள ரவி மோகன் ஸ்கோர் செய்துள்ளார். இதில் துடிப்புள்ள இளைஞராக, மொழிக்காக குரல் கொடுக்கும் அதர்வாவின் எனர்ஜி கொண்டாட வைத்துள்ளது. 60’s சம்பவத்தின் கியூட் ஹீரோயினாக வலம் வரும் ஸ்ரீ லீலா சின்ன சின்ன ரியாக்ஷன்களில் இளைஞர்களின் மனசை கொள்ளையடித்துள்ளார்.
மொத்தமாக சர்ச்சைக்குரிய ஒரு கதையை இந்த காலத்து தலைமுறை தெரிந்து கொள்ளும்படி எடுத்து அதில் பாசிட்டிவான விமர்சனத்தை பெற்றுள்ளது ’பராசக்தி’ குழு.
