மலேசியாவில் கார் பந்தய மைதானத்தில் அஜித்குமாரை நடிகை ஸ்ரீ லீலா சந்தித்துள்ளதன் மூலம், அஜித்தின் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக வெளியான தகவல் உறுதியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள அஜித்குமார், கார் பந்தயத்தின் மீதுள்ள ஆர்வம் காரணமாக சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை அவர் உருவாக்கியுள்ளார். ஜெர்மனி, துபாய், இத்தாலி நாடுகளில் நடைபெற்ற கார் பந்தய போட்டிகளில் கலந்து கொண்டு அஜித்குமார் பரிசுகளை வென்று அசத்தி வருகிறார்.
அதேவேளையில் திரைப்படங்களிலும் அஜித்குமார் கவனம் செலுத்தி வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றநிலையில், மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளார். இது, அஜித்தின் 64வது திரைப்படமாகும். இந்த படத்திற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தநிலையில், மலேசியாவில் கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ள அஜித்தை, நடிகை ஸ்ரீ லீலா சந்தித்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தை ஆக்கிரமித்துள்ளன. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் ஸ்ரீ லீலா நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளநிலையில், இந்த சந்திப்பு அதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
