ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியாகி உலகளவில் ₹300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்து வரும் திரைப்படம் ‘கருப்பு’. இத்திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, படத்தின் முக்கிய தூண்களாக விளங்கிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நடிகர் சூர்யா விலை உயர்ந்த கார்களைப் பரிசளித்துத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
‘கருப்பு’ திரைப்படத்தின் பிரம்மாண்ட காட்சிகளுக்கும், சாமியாட்ட சண்டைக் காட்சிகளுக்கும் தனது அசாத்திய கேமரா திறமையால் உயிர் கொடுத்தவர் முன்னணி ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு. இவரது சிறப்பான உழைப்பைப் பாராட்டும் விதமாக, அவருக்குப் புதிய மகிந்திரா BE6 பேட்மேன் எடிஷன் சொகுசு காரை சூர்யா பரிசாக வழங்கியுள்ளார்.
காரைப் பெற்றுக் கொண்ட ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணு, காரின் முன் நின்று எடுத்த புகைப்படத்தைத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “கடவுளின் செயல்!! மிக்க நன்றி சூர்யா சார்.. உங்களுக்கு மிகப்பெரிய மனசு!!!” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்..
ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணுவைத் தொடர்ந்து, ‘கருப்பு’ படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கருக்கும் நடிகர் சூர்யா கார் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
