ஒரே மாதத்தில் 32 திரைப்படங்களை வெளியிட்டு, தமிழ் சினிமா சாதனை படைத்துள்ளது.

கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு தமிழ்த் திரைப்படங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. அதன்படி 2024ம் ஆண்டு 241 திரைப் படங்கள் வெளியாகி இருந்தன. இந்த எண்ணிக்கை அதிகம் என்று அப்போது கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை 262 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. (2024ம் ஆண்டு நவம்பர் வரை 220 திரைப்படங்கள் மட்டுமே வெளியாகி இருந்தன). வருடத்தின் கடைசி மாதம் என்பதால் டிசம்பரில் 20-லிருந்து 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த வருடம் 280-க்கும் அதிகமான திரைப்படங்கள் வெளியாகி, சாதனைப் படைக்க இருக்கிறது.

இதற்கிடையே நவம்பர் மாதம் மட்டும், ஆரோமலே, அதர்ஸ், கிறிஸ்டினா கதிர்வேலன், பகல் கனவு, பரிசு, காந்தா, கும்கி 2, சூதாட்டம், மிடில்கிளாஸ், தீயவர் குலைநடுங்க, மாஸ்க், ரிவால்வர் ரீட்டா உள்பட 32 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த வருடம் இதுவும் தமிழ் சினிமாவில் சாதனை என்று கூறப்படுகிறது. இதுவரை ஒரே மாதத்தில் இத்தனை படங்கள் வெளியானதில்லை என்று திரைத்துறையினர் ஆச்சரியத்துடன் கூறுகின்றனர்.

இந்த 32 திரைப்படங்களில் மூன்று நான்கு படங்கள் மட்டுமே கவனிக்கப்பட்டன. ஜனவரியில் இருந்து நவம்பர் வரை வெளியான 262 திரைப்படங்களில் 28 படங்கள் மட்டுமே பாக்ஸ் ஆபிஸில் வெற்றிபெற்றுள்ளன. இது மொத்த எண்ணிக்கையில் 11 சதவிகிதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version