மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு ‘நாயகன்’ கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நேற்று (வியாழக்கிழமை) வெளியானது.
கர்நாடகாவில் கமலின் பேச்சுக்கு எதிர்ப்பு எழுந்ததால், அங்கு படம் வெளியாகவில்லை. இந்தச் சினிமா வெளியான முதல் நாளிலேயே எதிர்பார்ப்புக்கு மாறாக ரசிகர்களிடையே எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையும் விமர்சிக்கப்பட்டுள்ள நிலையில், பாடல்களே படத்தில் இல்லாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன் விளைவாக, இந்திய அளவில் இப்படம் முதல் நாளில் ரூ.17 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இது சமீபத்திய சில படங்களின் முதல் நாள் வசூலை ஒப்பிடும் போது குறைவாகும். உதாரணத்திற்கு:
சூர்யாவின் ‘ரெட்ரோ’ – ₹19.25 கோடி
கமலின் ‘இந்தியன் 2’ – ₹25.6 கோடி
மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் 1’ – ₹24 கோடி
அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ – ₹29.25 கோடி
‘விடா முயற்சி’ – ₹27 கோடி
இந்திய அளவில் வசூல் குறைந்திருந்தாலும், உலகளவில் ‘தக் லைஃப்’ வசூல் சற்றே ஆறுதல் அளிக்கக்கூடியதாக இருக்கலாம் எனத் திரையுலக வட்டாரங்களில் கூறப்படுகிறது.