கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்தை வரும் டிசம்பர் 24-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்.ஜி.ஆர் நினைவு நாளான அன்று படத்தை வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வா வாத்தியார்’. கீர்த்தி ஷெட்டி, ராஜ்கிரண், சத்யராஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்த இந்தப் படம் கடந்த டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஞானவேல் ராஜா கொடுக்க வேண்டிய கடன் பாக்கி உள்ளிட்ட பிரச்சினையால் அன்று படத்தை வெளியிட நீதிமன்றம் தடை விதித்தது. மீண்டும் எப்போது வெளியீடு என்பது தெரியாமல் இருக்கிறது.
இதனிடையே, டிசம்பர் 24-ம் தேதி ‘வா வாத்தியார்’ படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. ஏனென்றால் டிசம்பர் 24-ம் தேதி எம்.ஜி.ஆர் நினைவு தினம். ‘வா வாத்தியார்’ படமும் எம்.ஜி.ஆர் ரசிகர்களை மையப்படுத்திய படம் என்பதால் இந்த தேதி சரியாக இருக்கும் என்று படக்குழு திட்டமிட்டுள்ளது.
