“வடசென்னை 2” ஷூட்டிங் அடுத்த ஆண்டில் தொடங்கப்படும் என்று குபேரா பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் கூறியுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தமிழ் சினிமாவின் கல்ட் திரைப்படங்கள் என்று ஒரு பட்டியல் எடுத்துக் கொண்டால் அது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2018-ம் ஆண்டு வெளிவந்த வடசென்னை படத்திற்கு ஒரு முக்கிய இடமுண்டு.

வடசென்னையின் கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை உள்ளடக்கிய அவர்களின் வாழ்வியலை பிரதிபலித்த உன்னத படைப்பு வடசென்னை. கடற்கரையோரங்களில் வசித்து வந்த மீனவ மக்கள், விரிவாக்கம் என்ற பெயரில் எப்படி ஆதிக்க சக்தியினராலும், அரசாலும் பூர்வகுடியில் இருந்து விரட்டப்பட்டனர் என்பதை ரத்தமும்,சதையுமாக விவரித்ததில் வடசென்னை படத்திற்கு முக்கிய பங்கு உண்டு. 1975 தொடங்கி 2000 வரையிலான காலகட்டத்தில் காசிமேடு, ராயபுரம் பகுதியில் எத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்தன என்பதை வரலாற்றுத் தரவுகளுடன் புனைவு கலந்து உருவாக்கப்பட்ட படைப்பே வடசென்னை.

இதில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி, பவன், ஐஸ்வர்யா, ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். மண்ணின் மணத்தோடு எடுக்கப்பட்ட இப்படத்தில் ஒவ்வொருவரும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தனர். பாடல்கள், ஒளிப்பதிவு, பின்னணி இசை, சண்டைக் காட்சிகள் என ஒவ்வொன்றும் குறிப்பிட்டு சொல்லும்படி உலகத்தரத்தில் எடுக்கப்பட்டிருந்தது. பொருளாதாரதீயாகவும், விமர்சன ரீதியாகவும் வடசென்னை படம் அபார வெற்றி பெற்றது.

இதன் இரண்டாம் பாகம் எப்போது வருமென தனுஷ் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்நிலையில் தெலுங்கின் முன்னணி நடிகரான நாகார்ஜுனாவும், தனுசும் இணைந்து குபேரா என்ற படத்தில் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி உள்ள இப்படத்தை சேகர் கம்முலா தயாரித்து இயக்கி உள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இதில் பேசிய நடிகர் தனுஷ், என்னைப்பற்றி வதந்தி பரப்பி முடக்கி விடலாம்னு நெனக்கிறீங்க, தம்பிங்களா கொஞ்சம் தள்ளி போய் விளையாடுங்க, இங்க இந்த சர்க்கஸ் எல்லாம் வேண்டாம். நாலஞ்சு வதந்திகளை பரப்பி என்னை முடிச்சிடலாம்னு நெனச்சா அதைவிட முட்டாள்தனம் வேறெதுவும் இல்லை. என் ரசிகர்கள் எல்லாம் தீப்பந்தம் மாதிரி. அவங்க எரிஞ்சுகிட்டே இருக்கும்வரை நான் போய்ட்டே இருப்பேன். ஒரு செங்கல்லை கூட என்னிடம் இருந்து பிய்த்து எடுக்க முடியாது என்றார்.

அப்போது வடசென்னை -2 எப்போது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அடுத்த ஆண்டு படபிடிப்பு தொடங்கும் என்று உற்சாகத்துடன் தனுஷ் கூற, ரசிகர்கள் விசில் சத்தம் பல டெசிபல்களை தாண்டியது.

Share.
Leave A Reply

Exit mobile version