நடிகை வனிதா இயக்கம் மற்றும் நடித்த மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் நேற்று வெளியானது. வனிதாவின் மகள் ஜோவிகா தயாரித்துள்ள இப்படத்தில் வனிதாவிற்கு ஜோடியாக ராபர்ட் மாஸ்டர் நடித்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தில் இளையராஜாவின் ராத்திரி சிவராத்திரி என்ற பாடல் இடம்பிடித்துள்ளது. இதற்கு அனுமதி பெறாததால், இப்பாடலை படத்திலிருந்து நீக்குமாறு இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.
இது குறித்து வனிதாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு பதிலளித்த அவர், ‛‛தெய்வமே இப்படி செய்யலாமா? நாங்க அந்த பாடலுக்கு முறைப்படி சோனி மியூசிக் நிறுவனத்திடம் பணம் கொடுத்து அனுமதி வாங்கினோம். அவர்களுக்கும், இளையராஜா தரப்பும் இன்னும் பிரச்னை. இவர்களும் எங்களிடம் அனுமதி வாங்க வேண்டும் என்கிறார்கள். நான் ஒரு வீடு வாங்குகிறேன்.
பில்டரிடம் பணம் கொடுக்கிறேன். அப்போது இன்னொருவர் இந்த மனை எங்களுடையது என வந்தால் என்ன செய்ய முடியும். நான் அமைதியாக இருக்கிறேன். இளையராஜா வீட்டில் அவர் மனைவி ஜீவா அம்மாவிடம் லாக்கர் சாவி வாங்கி, நகையெல்லாம் எடுத்து அம்மனிடம் போட்டு பூஜை பண்ணியிருக்கேன். அந்த வீட்டுக்கு நிறைய உழைச்சிருக்கேன். இளையராஜா வீட்டுக்கு மருமகள் ஆக வேண்டியது. இதற்குமேல் பேச விரும்பவில்லை” என்று கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.