தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. 2011-ம் ஆண்டு “நுவ்வில்லா” என்ற நகைச்சுவை கலந்த காதல் திரைப்படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர். ”அர்ஜூன் ரெட்டி” திரைப்படம் மூலம் இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்டவர். இவரது நடிப்பில் கிட்டத்தட்ட 160 கோடி ரூபாய் செலவில் உருவான லைகர் திரைப்படம் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு விஜய் தேவரகொண்டாவின் திருமிரான பேச்சு தான் காரணம் என அப்போது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த தோல்வியில் இருந்து மீள, அடுத்தடுத்து தனது கதைகளை நிதானமாக தேர்ந்தெடுத்தார் விஜய் தேவரகொண்டா. 2023-ம் ஆண்டு சமந்தாவுடன் ஜோடி சேர்ந்த இவர் நடித்திருந்த ”குஷி” திரைப்படம் ஓரளவு இருவருக்கு கைக் கொடுத்தது. விமர்சன ரீதியாக வரவேற்பை இப்படம் பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக பின்னடைவே சந்தித்தது. அதனை தொடர்ந்து கடந்தாண்டு இவர் நடிப்பில் வெளியான ”தி ஃபேமிலி ஸ்டார்” திரைப்படமும் எதிர்பார்த்த அளவு செல்லவில்லை. தொடர் தோல்விகளில் இருந்து விஜய் தேவரகொண்டா மீள்வாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், அவரது பிறந்தநாளை ஒட்டி புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இப்படம் உருவாகவுள்ளது. VD14 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உடம்பு முழுவதும் காயங்களுடன் ஆன்மீக இடத்தில் விஜய் தேவரகொண்டா அமர்ந்திருப்பது போன்று அந்தப் போஸ்டர் அமைந்துள்ளது. 19-ம் நூற்றாண்டில் அதாவது 1854-78 காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு நாயகனின் வாழ்க்கையில் நடந்த உண்மையான வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ”டாக்ஸிவாலா” படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குநர் ராகுல் இணைந்துள்ளார். அதேப் போல, “டியர் காம்ரேட், குஷி” போன்ற படங்களை தொடர்ந்து 3-வது முறையாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் விஜய் தேவரகொண்டா கைக்கோத்துள்ளார்.