தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி சில வருடங்களிலேயே 50 படங்களுக்கு மேல் நடித்து வருபவர். ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என தனது எதார்த்த நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர். தமிழ் சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார் விஜய் சேதுபதி.
ஃபார்சி என்ற வெப் சீரிஸ், ஜவான், மெரி கிறிஸ்துமஸ் பட வெற்றியை தொடர்ந்து மேலும் பல பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மகாராஜா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ஏஸ் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்ற படத்தை இயக்கி இருந்தவர் ஆறுமுக குமார். அந்தப் படமும் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இருப்பினும் மீண்டும் இந்த கூட்டணி ஏஸ் திரைப்படம் மூலம் இரண்டாவது முறையாக ஒன்று சேர்ந்தது. ஏஸ் திரைப்படத்தை இயக்கியது மட்டுமின்றி தயாரிக்கவும் செய்துள்ளார் ஆறுமுக குமார்.
கன்னட திரையுலகின் முன்னனி நடிகையான ருக்மனி வசந்த் ஏஸ் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் அவினாஷ், யோகி பாபு, திவ்யா பிள்ளை என பலர் நடித்திருந்தனர். கடந்த 23-ம் தேதி திரைக்கு வந்த இப்படத்திற்கு, மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. ரூ.60கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், இந்தியா முழுவதும் வெறும் ரூ.19.61கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாகவும், உலகம் முழுவதும் ரூ.26.25கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.