நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு,செலுத்தியது.

அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த ஒப்பந்தத்தை மீறி, படங்களை வெளியிட்டதாகக் கூறி, பணத்தைப்திருப்பித் தர உத்தரவிடக் கோரி விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை உறுதி செய்த இரு நீதிபதிகள் அமர்வு, தொகையை செலுத்தாவிட்டால் தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்கங்கள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பணத்தை செலுத்தாததாலும், சொத்து விவரங்களை தாக்கல் செய்யாததாலும், நேரில் ஆஜராக விஷாலுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, அவரும் நேரில் ஆஜரானார். அவருக்கு உயர் நீதிமன்றம் கண்டனமும் தெரிவித்திருந்தது.

நீதிமன்ற உத்தரவின்படி, சொத்து விவரங்களை விஷால் தாக்கல் செய்தார். 3 கார்கள், ஒரு பைக் இருப்பதாகவும், இரண்டு வங்கி கணக்குகளின் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. தனக்கு சொந்தமான வீட்டின் கடன் தொடர்பான விவரங்களையும் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா இன்று தீர்ப்பளித்தார். லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் வழங்க விஷால் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்குச் செலவு தொகையையும் வழங்க விஷால் தரப்புக்கு உத்தரவிட்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version