தமிழ் சினிமாவில் உயரமான ஆக்சன் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் விஷால். தயாரிப்பாளர் கிருஷ்ணா ரெட்டியின் மகனான விஷால், 2004-ம் ஆண்டு ‘செல்லமே’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின் உட்பட ஒரு நட்சத்திர பட்டாளமே சேர்ந்து நடித்திருந்த ‘சண்டக்கோழி’ திரைப்படம் அவரது திரை வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது எனலாம். இந்தப் படத்திற்கு பிறகு தான் அவர் ஆக்ஷன் ஹீரோ என்றும் அழைக்கப்பட்டார்.
தொடர்ந்து ‘திமிரு, சிவப்பதிகாரம், தாமிரபரணி, மலைக்கோட்டை, சத்தியம்’ என ஆக்ஷன் கலந்த காதல் திரைப்படங்களில் நடித்து வந்த விஷால், ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தில் ஒரு சக்லேட் பையனாக நடித்திருந்தார். தொடர்ந்து அவன் -இவன் படத்தில் ஒரு மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார்.
கிட்டத்தட்ட 23 படங்களுக்கும் மேல் நடித்துள்ள விஷால், ‘பூஜை, ஆம்பள’ ஆகிய திரைப்படங்களை தயாரிக்கவும் செய்தார். இவரது நடிப்பில் 2015-ம் ஆண்டு உருவான ’மதகஜராஜா’ திரைப்படம் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றியடைந்தது. இதற்கிடையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார். சங்கக் கட்டடம், அரசியல் என ஒரு நிலைப்பாடு இல்லாமல் அங்கும் இங்குமாம அலைந்து வந்த விஷால், சற்றுகாலம் ஓய்ந்து இருக்கிறார்.
’மதகஜராஜா’ படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் மிகவும் வயதானதாகவும், நரம்பு தளர்ச்சி இருப்பது போன்றதொரு தோற்றத்தில் விஷாலை கண்ட பலரும் அதிர்ச்சியடைந்தனர். தனக்கு வைரல் காய்ச்சல் இருந்ததாலேயே அவ்வாறு இருந்ததாக அதற்கு விளக்கமும் கொடுத்திருந்தார். சமீபத்தில் கூவாகத்தில் நடந்த திருநங்கைகளின் விழாவில் கலந்து கொண்டவர் திடீரென மயங்கி விழுந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தமிழ் சினிமாவில் 40 வயதை கடந்தும் முரட்டு சிங்கிளாக இருந்து வரும் நடிகர்களுக்கு மூத்தவராக இருப்பவர் விஷால். கடந்த 2019-ம் ஆண்டு ஆந்திராவை சேர்ந்த அனிஷா ரெட்டிக்கும், விஷாலுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன்பிறகு அந்த உறவு திருமணம் வரை செல்லாமல் பாதியிலேயே நின்றது. தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கென கட்டடம் கட்டிய பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறியிருந்தார். அவர் கூறி 9 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தற்போது தான் கட்டடம் நிறைவடைந்துள்ளது.
விரைவில் கட்டடம் திறக்கவுள்ளதால், மீண்டும் விஷாலின் திருமணம் குறித்த பல்வேறு செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மதகஜராஜா படப்பிடிப்பின் போது வரலட்சுமியும், விஷாலும் காதலிப்பதாகவும், வெடி படத்தின் போது சமீரா ரெட்டியுடன் காதல் எனவும் பல கிசு கிசுக்கள் உலா வந்தன. சமீரா ரெட்டி மற்றும் வரலட்சுமி இருவருக்கும் திருமணம் முடிந்தும் விட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த விஷால், ஆகஸ்ட் 15-ம் தேதி நடிகர் சங்க கட்டடத்தை திறக்கவுள்ளதாகவும், அடுத்த 4 மாதங்களில் தனது திருமணம் நடப்பது உறுதி என வெளிப்படையாக அறிவித்தார். தனது பிறந்தநாளான ஆகஸ்ட் 29-ம் தேதி கூட தனக்கு திருமணம் நடக்கலாம் எனவும், பெண் பார்த்து பேசி முடித்து விட்டதாகவும், இது நிச்சயம் காதல் திருமணம் தான் எனவும் ஒரு -க்கு வைத்து அறிவித்தார்.
இதனை தொடர்ந்து யார் அந்த பெண்? யார் அந்த பெண் என இணையத்தில் பேச்சுக்கள் உலா வர ஆரம்பித்த நிலையில், நடிகை தன்ஷிகாவை அவர் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை தன்ஷிகா ஹீரோயினாக நடித்துள்ள யோகி டா படத்தின் விழா இன்று (19.05.2025) நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஷால் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், தன்ஷிகா-விஷால் காதல் குறித்தும், திருமணம் குறித்தும் அறிவிக்க, இருவரும் வெக்கத்தில் மூழ்கினர்.
பிறகு மேடையில் பேசிய நடிகர் ராதாரவி இருவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய தன்ஷிகா, விஷால் உடன் ஆகஸ்ட் 29-ம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக வெளிப்படையாக அறிவித்தார். விஷாலின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தேதியை தேர்வு செய்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். 47 வயதான விஷால் 35 வயதே ஆன தன்ஷிகாவின் காதல் திருமணம் குறித்து தான் கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.