கல்லூரி விழாவில் தன் ஆண் நண்பனுடன் தனியாக இருக்கும் பெண்ணை ( மோனிகா பன்வர்) கூட்டு பலாத்காரம் செய்கிறது அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவர் கும்பல் ஒன்று. இதனால் மனச்சிதைவுக்கு ஆட்பட்டு ஊரில் இருக்க முடியமால், ஆண் நண்பன்( அபிஷேக் சுக்லா) உதவியுடன் டெல்லிக்கு வருகிறாள்.
டெல்லியில் ஒதுக்குப்புறமான ஒரு அரசு நடத்தும் ஹாஸ்டலில் தங்குகிறாள். அந்த அறையில் அதற்கு முன்னர் வசித்து வந்த ஒரு பெண் இறந்து போக, நெடுநாள் அந்த அறை பூட்டியே கிடக்கிறது. அமானுஷ்யமான விஷயங்கள் அந்த அறையில் அவ்வப்போது நடக்கிறது. அதுமட்டுமல்லாமல், அந்த பெண்ணின் தோழிகளையும் வெளியே செல்லவிடமால் ஏதோ ஒன்று தடுக்கிறது.
இந்த விஷயங்களை சொல்லி அந்த அறையில் தங்க வேண்டாம் என்று தன் காதலி மோனிகாவை தடுக்கிறார் காதலன் அபிஷேக். ஹாஸ்டலில் வசிக்கும் நான்கு பெண்களும் வேண்டாம் என்று சொல்லி எச்சரிக்கிறார்கள். மனமுடைந்த நிலையில் இருக்கும் மோனிகா இந்த எதிர்ப்புகளை புறந்தள்ளி, அந்த அறையில் தங்குகிறாள். மேற்க்கொண்டு என்ன நடக்கவேண்டுமோ?? அது சிறப்பாகவே நடக்கிறது. இந்த இந்தி வெப் சீரீஸான “KHAUF”ளில்.
இடையில் நரபலி கொடுக்கும் சித்தமருத்துவர் (ரஜத் கபூர்) ஜெயிலுக்கு போய்விட்டு வந்த மகனை தேடும் பெண் ஹெட் கான்ஸ்டபிள், மனநல சிகிச்சை கொடுக்கும் மருத்துவர் என்று கிளைக்கதைகள். இவையெல்லாம் சேருகிற புள்ளியில் பல அதிர்ச்சிகளும் சில அயற்சிகளும் கிடைக்கிறது நமக்கு.
பொதுவாக திரைக்கதையில் இரு முனைகள் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஓர் புதிர்., அந்த புதிரை சுற்றி பின்னப்பட்ட சம்பவங்கள். பின் அந்த புதிரை அவிழ்க்கும் சூட்சுமம். வெறும் காட்சிகளை மட்டும் அடிக்கிக்கொண்டு போய், ஒரு புதிரில் நிறுத்தி, பின் ஒவ்வொன்றாக புதிரை அவிழ்க்கும் சூட்சுமம். இது மற்றொரு வகை.
ஹாரர் திரில்லர் வகை சினிமாக்களுக்கு இதுவே மூலம். பெரும்பாலும் தென் கொரிய சினிமாக்களில் இந்த வகையை நீங்கள் பார்க்கலாம். ஆனால் இன்னொரு வகையான ஹாரர் திரில்லர் வகைமை சினிமாக்கள் இருக்கிறது. அதுதான் “KHAUF” வகை சினிமாக்கள். “KHAUF” வெப் சீரியஸின் சிக்கலே அது தான். இது சினிமா அல்ல, தொடர். ஒவ்வொன்றும் 45-லிருந்து 50 நிமிடங்களுக்கு மேல் நீள்கிறது.
எந்த காரணமும் இல்லாமல் ஆபத்தான இடத்தை முக்கிய கதாப்பாத்திரம் தேர்வு செய்வது. பிரச்சனைக்கு உண்டான காரணங்களை சொல்லக்கூடிய, இடங்கள் இருந்தும், கதாபாத்திரங்கள் அதை தவிர்ப்பதும். காரணகாரியங்களை விட்டுவிட்டு, வேண்டுமென்றே சிக்கலில் தான்தோன்றித்தனமாக ஒவ்வொரு கதாபாத்திரங்கள் உலாவுவதும், பார்வையாளர்களுக்கு எரிச்சல் தரகூடியதாக இருக்கிறது.
இருந்தும் கொய்யாலே!!! அப்படி என்னதாண்டா எடுத்து வெச்சு இருக்கே??!! என்கிற உந்துதல் மட்டுமே இந்த வகையான சினிமாக்களை பார்க்க வைக்கும். அந்த வகையில் இந்த தொடருக்கும் அது பொருந்தும். இதில் மிக மிக இயல்பாகவும் ஆறுதலாகவும் இருப்பது மனநல மருத்துவராக வருபவர் மட்டுமே.
இதெல்லாம் முதல் இரு எபிசோட்களில் தான். அதன் பின் இந்த தொடர் சூடு பிடிக்க தொடங்குகிறது. மெதுவாக கதையின் போக்கு, நமக்கு பிடிபட்டவுடன் நிமிர்ந்து உட்காரவைக்கிறது. வேறு பக்கம் நம் கவனம் சென்றுவிடாத படி.
இந்த தொடரின் மிக மிக முக்கியாக நம் தலைநகர், டெல்லியின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டுகிறது. அழுக்கான டெல்லி. பப் கலாச்சாரங்களில் ஊறித்திளைக்கும் பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் ஆண்களின் மனநிலை. வயிற்றில் இருப்பது ஆணா? பெண்ணா? பெண் சிசு என்றால் கலைத்துவிடலாம் என்று நினைக்கும் கணவனின் பிற்போக்குத்தனம். ஆண் பிள்ளை குற்றவாளியாகவே இருந்தாலும் அவனை ஆராதிக்கும் தாய். பெண்ணின் பிறப்புறுப்பில் கம்பியை சொருக நினைக்கும் வக்கிரம்.
டெல்லியின் க்ரைம்தனங்களையும் இந்தியாவின் மொத்த பிற்போக்குத்தனத்தையும் நமக்கு சுட்டிக்காட்டுகிறது KHAUF”. ஒருபக்கம் அழகிய இரவு கலாச்சாரம் மறுபுறம் டெல்லியில் இருளில் மிதக்கும் அழுக்கு முகம். பார்க்க பார்க்க பதைபதைப்பு கூட்டுகிறது. இவையெல்லாம் பார்க்கும் போது தமிழ்நாடு சொர்க்க பூமிதான்
தரமான பின்னனி இசை – ஹாரர் தொடருக்கே உரித்தான இருள் சூழ்ந்த, இடங்களை துல்லியமாக காட்சிப்படுத்தும் ஒளிப்பதிவு. குறிப்பாக ஹாஸ்டல். அதை சுற்றியுள்ள இடங்களையும், சித்த மருத்துவரின் வீட்டை காட்சிப்படுத்திய விதங்களையும் சொல்லலாம். ஒவ்வொரு ப்ரேமையும் திகில் ஏற்படும் விதமாகவே சுட்டு இருக்கிறார் ஒளிப்பதிவாளர். எடிட்டிங்கும் அதே ரகம். ஒரு காட்சியில் இருந்து அடுத்த காட்சிக்கு வெட்டப்பட்டவிதம் பிரமிப்பை கூட்டுகிறது. குறிப்பாக இருவேறு மழைக்காட்சியை இணைத்த விதத்தை சொல்லலாம். அட்டகாசம். சவுண்ட் டிசைன் இந்ததொடருக்கு கூடுதல் மெருகேற்றுகிறது. இவை அனைத்தையும் ஒன்றாக இணைத்த இயக்குநர் பங்கஜ் குமார், தன்னுடைய வேலையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
இந்த தொடரில் ரன்னிங் டைம் கூட தொந்தரவு இல்லை. இருந்தாலும் முதல் இரு எபிசோட்டை மட்டும் நறுக்கிவிட்டு ரிலீஸ் செய்திருந்தால் ஒருவேளை பேசப்பட்டிருக்கும்.
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இருக்கிறது. தமிழிலும் பார்க்கலாம். நீங்கள் ஆங்கில சப்டைட்டிலுடன் இந்தியில் பார்ப்பதே நலம்.
Viji’s palanichamy