சூர்யவம்சம் படத்தின் கலெக்டர் தேவயானியை அவ்வளவு எளிதில் தமிழர்கள் மறந்துவிட மாட்டார்கள். வெளிமாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் கிட்டத்தட்ட தமிழ் பெண்ணாகவே அடையாளப்படுத்தப்படுபவர் தேவயானி. காதல்கோட்டை, அழகி, பாரதி, ஆனந்தம், ப்ரண்ட்ஸ் என்று சிறந்த திரைப்படங்கள் பலவற்றில் நடித்து புகழ்பெற்றவர். விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தை இயக்கிய ராஜகுமாரனை காதலித்து கரம்பிடித்து பலரையும் ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கினார்.

திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட பின்னர் சின்னத்திரையில் ஒரு கலக்கு கலக்கினார். குறிப்பாக கோலங்கள் நெடுந்தொடர், தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் தேவயானிக்கு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. இதுமட்டுமல்லாது குறும்படங்கள் இயக்குவது, பின்னணி குரல் கொடுப்பது என்று சினிமாவோடு எப்போதும் தன்னை அணுக்கமாக வைத்திருப்பவர் தேவயானி.

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற ஒரு ரியாலிட்டி ஷோ சரிகம. இதன் சீனியர் பாடகர்களுக்கான ஐந்தாவது சீசன் தற்போது தொடங்கி உள்ளது. இதில் யாரும் எதிர்பாராதவிதமாக இனியா என்றொரு இளம்பெண் பாரதி படத்தில் இடம்பெற்ற மயில்போல பொண்ணு ஒண்ணு என்ற பாடலை பாடினார். நடுவர்கள் விஜய் பிரகாண், சீனிவாசன், ஸ்வேதா, இயக்குநர் டி.ராஜேந்தர் ஆகியோர் வியந்து பாராட்டினர்.

அந்த பெண் நடிகை தேவயானியின் மகள் என்று தெரிந்தபோது ஒட்டுமொத்த சரிகமப குழுவினரே ஆச்சர்யப்பட்டு போயினர். முன்னணி நடிகையாக உள்ள அவர், தனக்கு தெரிந்த நட்பு வட்டாரத்தின் அடிப்படையில் தன்னுடைய மகளை ஒரு பாடகியாக்கி இருக்க முடியும். ஆனால் முறைப்படி சங்கீதம் பயில வைத்து, பொதுமக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் சாமான்ய ஒருவராக பங்கேற்று திறமையைக் காட்டி வெற்றி பெற்று மேலே வரட்டும் என்று நினைப்பது உண்மையிலேயே தேவயானியின் மீது மரியாதையை அதிகரிக்கச் செய்துள்ளது.

இதுபற்றி தன்னுடைய எக்ஸ் தளத்தில் நடிகர் சரத்குமாரும், தேவயானியை பாராட்டு பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், தமிழ் சினிமாவின் மாபெரும் கதாநாயகியின் மகள் என்ற பரிந்துரை கொண்டு, நேரிடையாக திரைப்பட பாடல்களில் பாடி இசையுலகில் தடம் பதித்திருக்க முடியும். ஆனால், தனது சொந்த முயற்சியால் உயர்ந்து சினிமாத்துறையில் கதாநாயகியாக சாதிக்க ஆர்வம் கொண்டு, சரிகமப நிகழ்ச்சி மேடையை சரியாக பயன்படுத்தி, மக்கள் மனதில் இடம்பிடித்திருப்பது பாராட்டுக்குரியது என்று கூறியுள்ளார்.

சபாஷ் தேவயானி, வாழ்த்துகள் இனியா..

Share.
Leave A Reply

Exit mobile version