தூத்துக்குடியில் மதுபோதையில் நண்பரை சக நண்பர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி பூபாலராயர்புரத்தை சேர்ந்த இளைஞர் விஜய். 22 வயதான இவர் தனது நண்பர்களான முத்துக்குமார், சஞ்சய், முத்துகவுதம் ஆகியோருடன் சேர்ந்து தூத்துக்குடி லயன்ஸ்டவுனில் இருந்து ஊருணி ஒத்தவீடு செல்லும் சாலையில் காட்டுப்பகுதியில் உள்ள தனியார் உப்பு குடோனில் வைத்து நேற்று முன்தினம் இரவு மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.
அப்போது ஏற்பட்ட தகராறில், முத்துக்குமார், முத்து கவுதம், சஞ்சய் ஆகிய 3 பேரும் விஜய்யை உருட்டு கட்டையால் அடித்தும், அரிவாளால் வெட்டியதாகவும் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த விஜய், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார் விஜய்யின் உடலை கைப்பற்றியதோடு, இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதன்படி, முத்துக்குமார், முத்து கவுத, சஞ்சய் ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.