விருதுநகரில் இன்ஸ்டாவில் தொடங்கிய காதலில் காதலியிடம் இருந்து நகை, பணத்தை சுருட்டி ஏமாற்றிய காதலன் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆவாரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விசைத்தறி அதிபர் நாகசெந்தில். இவரது மகள் நாக அட்சயா, சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் நாக அட்சயாவுக்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த லிவின் என்ற இளைஞருடன் அறிமுகமாகியுள்ளார். அவர் நாக அட்சயாவை காதலிப்பதாகவும், திருமணம் செய்ய விரும்புவதாக காதல் வலையை வீசியுள்ளார். அதில் அட்சயாவும் விழுந்து, காதல் மற்றும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதனை பயன்படுத்திக் கொண்ட லிவின், நீ இங்கு வந்தால் நாம் உடனடியாக திருமணம் செய்து கொள்ளலாம், அதற்காக வீடு பார்க்க பணம் தருமாறு நாக அட்சயாவிடம் கேட்டுள்ளார். இதை நம்பிய நாக அட்சயா, காதலன் லிவினை கர்நாடகாவில் இருந்து ராஜபாளையத்துக்கு வரவழைத்து தனக்காக பெற்றோர் சேர்த்து வைத்திருந்த 25 பவுன் நகையை எடுத்து கொடுத்துள்ளார்.
அதை பெற்றுக்கொண்டு கர்நாடகா திரும்பிய லிவின், தனக்கு பணம் போதவில்லை. எனவே மேலும் ரூ.50 ஆயிரம் பணம் வேண்டும் என நாக அட்சயாவிடம் கேட்டுள்ளார். இதற்கிடையே லிவினின் பேச்சு, நடவடிக்கையில் சந்தேகமடைந்த நாக அட்சயா ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
பின்னர் லிவினிடம் மீண்டும் ராஜபாளையம் வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இந்த நிலையில் லிவினின் வருகைக்காக காத்திருந்த போலீசார் திட்டமிட்டபடி அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் நாக அட்சயாவிடம் இருந்து பெற்ற 25 பவுன் நகை தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.