அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என செய்தியாளர் சந்திப்பு நடத்தி அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது கட்சி பொறுப்புகள் அனைத்தையும் பறித்து உத்தரவிட்டார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து மதுரையில் நடந்த தேவர் குரு பூஜை நிகழ்வில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருடன் சேர்ந்து பங்கேற்றார் செங்கோட்டையன். இதனையடுத்து, கட்சியில் இருந்தே நீக்கி உத்தரவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
இதற்கிடையே, செங்கோட்டையன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் விஜய்யை சந்தித்து தவெகவில் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. செங்கோட்டையனை தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் சந்தித்து பேசியதாகவும், ஓரிரு நாட்களில் விஜய்யுடன் பேசிய பிறகு தவெகவில் செங்கோட்டையன் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையனுடன் த.வெ.க. பேசிவருவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், அந்தப் பேச்சுவார்த்தை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதேநேரம், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு சாத்தியமில்லை எனத் தொடர்ந்து இ.பி.எஸ். திட்டவட்டமாகக் கூறிவருவதால் தன்னுடைய அடுத்தகட்ட அரசியல் நகர்வாக த.வெ.க.வில் இணையும் முடிவுக்கு செங்கோட்டையன் வந்திருப்பதாகவும் உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய்யுடன் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக செங்கோட்டையன் தனது முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம், வரும் 30ஆம் தேதி செங்கோட்டையனின் சொந்த தொகுதியான கோபிச்செட்டிபாளையத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டம் நடத்தவிருக்கிறார். அதற்கு முன்னதாக, செங்கோட்டையன் தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வை அறிவிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
