2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி தொகுதி எண்ணிக்கையை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வரும் காங்கிரஸ், திமுகவிடன் 40 தொகுதிகளை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஆளும் கட்சி, மற்றும் எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணியை வலுப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். தற்போது அதிமுக – பாஜக கூட்டணி மட்டுமே உறுதியாகியுள்ளது. நாம் தமிழர் கட்சி தனித்து நின்று களம் காணும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தேமுதிக கூட்டணி குறித்து ஜனவரியில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியினர் இரண்டு பிரிவுகளாக பிரிந்து பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
முக்கியமாக ஆளும் திமுக கூட்டணியில் உள்ள விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், திமுகவுடனான தங்களது கூட்டணியை பேட்டி வாயிலாக அவ்வப்போது உறுதி செய்து வருகின்றனர்.
விஜயுடன் பேச்சுவார்த்தையா?
இதற்கிடையில் காங்கிரஸ் கட்சி தவெக-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் விஜயை சந்தித்ததாகவும், விஜயுடன் ராகுல் காந்தி பேசியதாக தகவல் வெளியாகியது. இதனை ஏற்க மறுத்த காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, இந்தியா கூட்டணி வலுவாக உள்ளதாக தெரிவித்திருந்தார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், நிகழ்ச்சி ஒன்றில் கை எங்கையேயும் செல்லாது என கூறியிருந்தார்.
இதனையடுத்து சட்டமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த, காங்கிரஸ் தலைமை கிரிஷ் சோடங்கர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி காங்கிரஸ் அறிவித்தது. அந்த குழுவில், தமிழக காங்கிரஸ் மெலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், செயலாளர்கள் சூரஜ் எம். என்.ஹெக்டே, நிவேதித் ஆல்வா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த குழு நியமனத்தை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்றிருந்தார்.
இந்த ஐவர் குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் கடந்த மாதம் 23 ஆம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு உள்ளது? திமுகவிடம் மொத்தம் எத்தனை தொகுதிகள் கேட்பது? குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு நேற்று முன்தினம் (நவ.3) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய செல்வப்பெருந்தகை, “ மரியாதை நிமித்தமாக முதலமைச்சரை சந்தித்தோம். திமுக தரப்பில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைக் குழு அமைத்தவுடன், தொகுதி பங்கீடு குறித்து இந்த குழு பேச்சுவார்த்தை தொடங்கும். கிழக்கா? மேற்கா? வடக்கா? தெற்கா? என பலருக்கும் சந்தேகங்கள் இருந்தது. அந்த சந்தேகங்களுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி உறுதியாக உள்ளது என்பதற்கு இந்த சந்திப்பு உதாரணம்” என்றார்.
மேலும், தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. குறைவான தொகுதி கொடுத்தாலும் திமுக கூட்டணியில் தொடர்வீர்களா? என்று கேள்விக்கு, “இதில் என்ன சந்தேகம்? கடந்த 4 தேர்தல்களில் உறுதியாக ஒன்றாக பயணித்துள்ளோம்” என்றார். தொடர்ந்து, தமிழ்நாட்டில் திமுக தலைமையில் மீண்டும் அரசு அமைந்தால் ஆட்சியில் பங்கு கேட்பீர்களா? என்ற கேள்விக்கு, பதில் அளிக்காமல் அவர் அங்கிருந்தார் சென்றார்.
ஆனால், இந்த முதலமைச்சர் சந்திப்பில், தமிழ்நாட்டில் 120 தொகுதிகளில் காங்கிரஸ் வலுவாக உள்ள இடங்களின் பட்டியலை திமுகவிடம் கொடுத்துள்ளதாகவும், அதில் நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு சட்டமன்ற தொகுதி என 40 இடங்கள் வரை காங்கிரஸ் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 25 தொகுதிகளை மாற்றாமல் தர வேண்டும் எனவும் காங்கிரஸ் டிமாண்ட் வைத்ததாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு குழுவிற்கு ஏன் அவசரம்?
திமுக தொகுதி பங்கீடு குழு அமைத்தவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என செல்வப்பெருந்தகை கூறியுள்ள நிலையில், ஏன் இவ்வளவு அவசரமாக காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு குழு அமைத்தது? என்பது அரசியல் தளத்தில் கேள்வியாக உள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் பெற்ற தொகுதியை அலசி பார்த்தால், கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 63 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களிலும். 2016 சட்டமன்றத் தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்டு 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக விடம் காங்கிரஸ் 25 தொகுதிகளை பெற்று, 18 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் பெற்றுவரும் தொகுதி குறைந்து கொண்டே வருகிறது.
2021 தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள்
| கட்சிகள் | இடங்கள் |
| காங்கிரஸ் | 25 இடங்கள் |
| சிபிஎம், சிபிஐ, விசிக, மதிமுக | 6 இடங்கள் |
| இந்திய யூனியன் முஸ்லீம் லீக் , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி | 3 இடங்கள் |
| மனிதநேய மக்கள் கட்சி | 3 இடங்கள் |
| தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, அகில இந்திய பார்வர்டு பிளாக்,
மக்கள் விடுதலை கட்சி |
1 இடம் |
தொகுதி அதிகரிப்புக்கு காரணம் என்ன?
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு, விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதன் காரணமாக, திமுக கூட்டணி கட்சிகள் கடந்த முறை போட்டியட்டதைவிட அதிக தொகுதிகள் கேட்பதாக வட்டார தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால், கடந்த முறை திமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளுடன், இந்த முறை புதியதாக மக்கள் நீதி மய்யம் கட்சியும் இணைந்துள்ளது.
திமுகவிற்கு புதிய சவால்
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக 173 இடங்களில் போட்டியிட்டாலும், தற்போது கூட்டணியில் இணைந்துள்ள மக்கள் நீதி மய்யத்திற்கு தொகுதி கொடுக்க வேண்டிய சூழல் உள்ளது. இவர்களுக்கு தொகுதி வழங்க, காங்கிரஸ் தொகுதிகளில் இருந்து குறைக்கப்படலாம் என கூறப்படும் நிலையில், காங்கிரஸ் தற்போது 40 இடங்கள் வரை கேட்டுள்ளதாக தெரிகிறது.
மக்கள் நீதி மய்யத்திற்கு தொகுதி வழங்க வேண்டும் என்ற சூழலில், காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடம் கொடுத்தால் திமுக போட்டியிடும் தொகுதிகள் குறையும். கூட்டணி கட்சிகள் வெளியேறவும் கூடாது, தொகுதிகள் எண்ணிக்கை அதிகம் தரவும் கூடாது என்ற நிலையில், தொகுதி பங்கீட்டை முடிப்பதே திமுகவிற்கு பெரும் சவாலாக உள்ளது.
தொடர்ந்து தொகுதிகளின் எண்ணிக்கை குறைவாக பெற்று வரும் காங்கிரஸ், இந்த முறை 25-ஐ விட குறைவான தொகுதிகளை பெறுமா? அல்லது தவெகவை மாற்றாக வைத்து கூடுதல் தொகுதியை பெறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
