பீகார் தேர்தல் முடிவு அடுத்தடுத்து தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களில் காங்கிரசின் திட்டங்களையெல்லாம் சுக்குநூறாக்கி இருக்கிறது. காங்கிரசை மையப்படுத்தி அந்தந்த மாநிலங்களில் அரசியல் சூழலும், கூட்டணி திட்டங்களும் கூட மாறியிருக்கின்றன. அந்த வகையில், தமிழ்நாட்டிலும் மாறியிருக்கும் அரசியல் நிலவரங்கள் மாறியிருக்கின்றன. அது பற்றி பார்க்கலாம்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக – காங்கிரஸ் கூட்டணி என்பது பிரிக்க முடியாத ஒன்றாகவே பார்க்கப்பட்டு வந்த நிலையில், “திமுகவை விட்டுவிட்டு காங்கிரஸ் தவெக பக்கம் தாவப்போகிதோ?” என்கின்ற எண்ணத்தை கொடுக்குமளவுக்கு மூத்த கதர் புள்ளிகளின் பேச்சுகளும் செயல்பாடுகளும் இருந்தன. இங்கிருக்கும் கே.எஸ்.அழகிரி முதல் மேலிடத்தில் இருக்கும் கிரிஷ் சோடங்கர் வரை ஒரு சாரார் காங்கிரசை பலப்படுத்த வேண்டுமென்ற வேலையில் திமுகவை டென்ஷானாக்கி வந்தனர். “சாறு அவங்களுக்கு சக்கை எங்களுக்கா?” என்ற கே.எஸ்.அழகிரியின் வசனம், “125 தொகுதிகளில் முக்கிய கவனத்தை செலுத்துங்கள்” என்ற காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான கிரிஷ் சோடங்கரின் உத்தரவு மூலமான மறைமுக மெசேஜ், எஸ்.ஐ.ஆர்-க்கு எதிரான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் போராட்டத்தை பல மாவட்டங்களில் புறக்கணித்தது” போன்ற காங்கிரசின் இத்தகைய நடவடிக்கைகள், ஏற்கனவே இருக்கும் பிரச்சனையில் திமுகவுக்கு கூடுதல் தலைவலியாய் ஆகிப்போனது. “கூடுதல் இடங்கள்; ஆட்சி அதிகாரத்தில் பங்கு” என்ற ஒற்றை நோக்கத்தோடு கூக்குரல் எழுப்பி வந்த காங்கிரசை, “பேசாமல் கழட்டி விடலாம்; மாற்றுக்கு பாமக, தேமுதிகவை அணுகலாம்” என்ற அடுத்தகட்ட திட்டத்தையெல்லாம் கூட திமுக யோசித்துவிட்டு நிலையில், அத்தகைய நிலைமையை அப்படியே புரட்டிப்போட்டுவிட்டது பீகார் தேர்தல் முடிவு.
பீகார் தேர்தல் முடிவால் காங்கிரசின் திட்டங்கள் தவிடுபொடியாக, ஒரு பக்கம் கொண்டாட்டத்தில் இருக்கிறது திமுக; மறுபக்கம் குழப்பத்தில் இருக்கிறது தவெக.அதாவது, ‘இனி திமுகவை தங்கள் சொல்படி ஆட்டுவிக்க முடியும்’ என்ற எண்ணத்தோடு இருக்கும் திமுக முன்பு கொடுத்த 25 சீட்டுகளை கூட இந்தமுறை தருவார்களா என்பது சந்தேகம் தான் என்கின்றனர் அறிவாலயவாசிகள். காரணம் இந்த தோல்விக்கு பின் காங்கிரசை திமுகவினர் எப்படி பார்க்கின்றனர் என்பதற்கு எடுத்துக்காட்டு தான், ஆர்.எஸ்.பாரதியின் மகனான சாய் லட்சுமிகாந்த் போட்டுவிட்டு டெலிட் செய்த பதிவு. அப்பதிவில், “எத்தனை சீட் கேட்ட, 117-ஆ? பீகார்ல முன்னிலையில் இருக்க 11 சீட் தான் இங்கேயும்” என கிண்டலடிப்பது போன்று இருந்தது அப்பதிவு. ஆக, நிலைமை இப்படி ஆகிவிட்ட நிலையில் “இப்போ என்ன பண்றது? ஓவரா பேசிட்டோமே?” என மனதிற்குள் முணுமுணுத்துக்கொள்கிறார்கள் சீனியர் கதர் புள்ளிகள். இந்த சூழலை பயன்படுத்தி திமுக எதிர்ப்பு மனநிலை கொண்ட கதர் தோழர்களை ‘திமுகவோடு இருப்பது தான் சரி’ என மூளைச்சலவை செய்கின்றனராம் திமுக ஆதரவு கதர் தோழர்கள்.
இதில் மற்றொரு விடயம் என்னவென்றால், காங்கிரசை நோக்கி நேசக்கரம் நீட்டி நெருங்கிய தவெக, “இப்படி தோற்றுப்போன காங்கிரசை நம்பி எப்படி கூட்டணியில் இணைத்துக்கொள்வது?” என குழம்பிப்போய் இருப்பது தான். மேலும், “இந்த தோல்விக்கு பின் திமுகவை விட்டு காங்கிரஸ் வருமா?” எந்த சந்தேகமும் கூட்டணி நடவடிக்கைகளில் தொய்வை ஏற்படுத்தி இருக்கிறது. கிட்டத்தட்ட கூட்டணி உறுதியாகிவிடுமோ என்ற அளவிற்கு காங்கிரஸ் – தவெக மேல்மட்ட நிர்வாகிகள் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. அதைப்பற்றி நமது முந்தைய கட்டுரையில் கூட பார்த்தோம். அப்படி இருந்த நிலை தற்போது தேக்க நிலையாக மாறியிருக்கிறது. இதில் விஜய்யின் தயக்கத்திற்கு மற்றொரு காரணமாக பனையூர்வாசிகள் சொல்வது, பீகாரில் தேஜஸ்வி யாதவ்வை காங்கிரஸ் படுத்தியபாட்டை பார்த்து கொஞ்சம் ‘ஷாக்’ ஆகித்தான் இருக்கிறாராம் விஜய். இதனால் காங்கிரசை நம்பியிருந்த விஜய் கூட்டணி தொடர்பாக மாற்று திட்டம் பற்றி யோசிக்க தொடங்கியுள்ளதாகவும் தெரிகிறது.
இப்படியாக தமிழக அரசியல் சதுரங்கத்தில் ஆடும் ஆட்டங்களில் அடுத்த ஆட்டம் என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
