புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து பரிந்துரைக்கும்போது குற்றப் பின்னணி இல்லாதவர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளவும், குற்ற வழக்கில் நிர்வாகிகள் சிக்கினால் தலைமைக்கு உடனடியாக தெரியப்படுத்துமாறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.
திருச்சி , தஞ்சை, சேலம் , கோவை உட்பட அதிமுகவின் 20 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர், தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் செல்ல இருப்பது குறித்தும் , பூத் கமிட்டி பணிகளை முடிக்காத மாவட்ட நிர்வாகிகள் இன்னும் 15 நாட்களுக்குள் அவற்றை நிறைவு செய்து கட்சித் தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் மாவட்ட செயலாளர் மற்றும் பொறுப்பாளர்கள் இணைந்து புகைப்படம் எடுத்து கட்சித் தலைமைக்கு அனுப்ப வேண்டும் என்றும் ஐடி விங் மூலம் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக பரிந்துரைக்கும்போது குற்றப் பின்னணி இல்லாதவர்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் நிர்வாகிகளில் யாரேனும் குற்ற வழக்கில் தொடர்புடையோராக இருந்தால் தலைமைக்கு தெரியப்படுத்துமாறும் அறிவிறுத்தப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.