வாக்குச்சாவடி சீரமைப்புப் பணிகள் ஜூலையில் தொடங்கவுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஊடகப் பிரிவு துணை இயக்குநர் பி.பவன், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் துறையில் ஆலோசனை நடத்தினார்.
தேர்தல் துறையில் மேற்கொள்ளப்படும் ஊடக மேலாண்மைப் பணிகள், சமூக ஊடகங்களின் செயல்பாடு ஆகியவற்றை ஆய்வு செய்தார். இதன்பின் பிரதான ஊடகங்களின் செய்தியாளர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
இந்த நிகழ்வின் போது, தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் அக்டோபரில் தொடங்கப்படும். இந்தப் பணிக்கு முன்பாக, வாக்குச் சாவடிகளை சீரமைக்கும் பணிகள் ஜூலையில் தொடங்கும்.
தமிழகம் முழுவதும் 68 ஆயிரத்து 400-க்கும் அதிகமான வாக்குச் சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு வாக்குச் சாவடியும் 1,200 வாக்காளர்களுக்கு உட்பட்டே இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்.
மாநிலத்தில் 1,200-க்கும் அதிகமாக வாக்காளர் இருக்கக் கூடிய வாக்குச் சாவடிகள் சுமார் 11 ஆயிரம் வரை இருக்கும். எனவே, அந்த வாக்குச் சாவடிகள் அனைத்தும் மறுசீரமைப்பு செய்யப்படும்.
மேலும், உயரமான கட்டடங்கள், நகர்ப்புரங்களில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் வாக்காளர்களின் வசதிக்காக அந்தப் பகுதியிலேயே வாக்குச் சாவடிகள் அமைத்திட தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
வாக்காளர் பட்டியல்கள் அனைத்தும் பிழையில்லாமல் இருக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு வாக்குச் சாவடி அலுவலர்கள் நியமனம் செய்யப்படுவர். தேர்தல் ஆணையத்தின் வரைமுறைகள், விதிகளுக்கு உட்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகள், மாவட்டத் தேர்தல் அலுவலர்கள், வாக்குச் சாவடி அலுவலர்கள் உள்ளிட்டோர் நியமிக்கப்படுவர் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.
