திமுகவின் ஊழல் பணத்தை டெலிவரி செய்யும் ஏடிஎம் மெஷின் தான் செந்தில் பாலாஜி என்று கரூரில் பேசிய தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்துள்ளார். கரூரில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் விஜய் பேசியதாவது..
என்னை பாதுகாப்பாக அழைத்து வந்த காவல்துறைக்கு நன்றி. அமராவதி ஆற்றங்கரையில் உள்ள ஊர் கரூர்.
ரொம்ப முக்கியமான டெக்ஸ்டைல் மார்க்கெட் இது, மிகவும் சிறப்பு வாய்ந்தது. கரூரை பெருமையாக சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கு. அதுல எந்த மாற்றக் கருத்தும் இல்ல. ஆனா சமீபத்தில் ஒரு விஷயத்துக்கு ரொம்ப பேரு வாங்குச்சு. அதுக்கு யார் காரணம்? அதை பின்னாடி பேசுறேன்.
இப்போ தமிழ்நாடு அரசு கரூருக்கு கொடுத்த வாக்குறுதிகளை பார்ப்போம். பேரீச்சை வளர்ப்பு சிறப்பு திட்டம். தேர்தல் வாக்குறுதி எண் 81. பேரீச்சை மரத்தை விடுங்க, குறைந்தபட்சம் பேரீச்சை விதையாச்சும் கண்ணுல காட்டுனாங்களா?. துபாய் குறுக்கு சந்தை கதைதான். அடுத்தபடியா கரூரில் விமான நிலையம் கொண்டு வரப்படும் என்று தேர்தல் வாக்குறுதி எண் 448-ல் சொல்லி இருந்தாங்க. ஆட்சியே முடியப் போகுது. நான்கரை ஆண்டுகள் முடிந்து விட்டது. இப்போது போய் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கிறார்கள். ஐயா அமைச்சரே இதுதானா உங்க டக்கு.
விமான நிலையம் வந்தால் ஜவுளி தொழில் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் பரந்தூரைப் போல மக்களை பாதிக்கக் கூடிய வகையில் வரக்கூடாது. மக்களை பாதிக்காமல் விமான நிலையம் கட்டினால் நன்றாக இருக்கும். மணல் கொள்ளை கரூரின் தீராத பிரச்னை. மணல் கொள்ளை கரூரை வறண்ட மாவட்டமாக மாற்றி விட்டது. சட்டவிரோத மணல் குவாரிகளால் கரூர் அழிஞ்சிக்கிட்டு வருது. இதற்கு பதில் இருக்கா சி.எம்.சார்? 11 மணிக்கு திமுக பதவியேற்ற உடன் தாராளமாக மணல் அள்ளலாம் என்று பேசியவர்கள் யார் என்று தெரியும்ல?.. நீங்கள் எல்லாம் கனவு காண்கிற காவிரி தாய்க்கும், கரூருக்கும் விடுதலை கிடைக்கும்..
தமிழ்நாட்டோட 3-வது பெரிய ஏரி பஞ்சப்பட்டி. ஆயிரம் ஏக்கர். அந்த ஏரி நல்லா இருந்தா, விவசாயம் செழிப்பா இருக்கும். விவசாயம் செழிப்பா இருந்தா குடும்பங்கள் சந்தோஷமா இருக்கும். ஆனா அதனை சீரமைக்காம தண்ணீர் வர்ற வழியில் தடைகளை போட்டு வச்சி இருக்காங்க. தவெக ஆட்சிக்கு வந்ததும் பஞ்சப்பட்டி ஏரிக்கு நல்லகாலம் பிறக்கும். அதேபோல கரூரின் சாயக்கழிவுகளை சுத்திகரிக்க அறிவியல் பூர்மான நடவடிக்கை எடுக்கப்படும்.
இப்போ முக்கியமான விஷயத்துக்கு வர்றேன். இந்த பகுதியில் மந்திரி, மந்திரி என்று ஒருவர் இருந்தார். இப்போ அவர் மந்திரி இல்ல. ஆனாலும் மந்திரி. யாரைச் சொல்றேனு தெரியுதா? பாட்டிலுக்கு 10 ரூபா, பாட்டிலுக்கு 10 ரூபா (இதனை பாடலாக பாடினார்). சமீபத்தில் முப்பது பேர் விழா ஒண்ணு நடந்ததுல, சாரி முப்பெரும் விழா. அதுல அந்த மாஜி மந்திரிய உச்சி முகர்ந்து நம்ம சிஎம் சார் பேசுனறாரு. ஆனா எதிர்கட்சித் தலைவரா இருக்கும்போது என்ன பேசினாருனு யூ டியூப்ல போய் பாருங்க. இவரைப் பத்தி என்ன சொல்றாங்க தெரியுமா? திமுகவின் ஊழல் பணத்தை டெலிவரி செய்யக்கூடிய ஏடிஎம் மெஷின் தான் அவருனு சொல்றாங்க.
காவல்துறை கையைக் கட்டிக் கொண்டு இருக்கிறதா? ஆட்சி மாறும், காட்சி மாறும். அதிகாரம் எங்கள் கையில் வரும், நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.