பிரபல நடிகர் ராம்சரண் மனைவியும் அப்போலோ குடும்பத்தின் சேர்மன் பிரதாப் ரெட்டியின் பேத்தியுமான உபாசனா காமினேனி கொனிடேலா நேற்று முன்தினம் ( நவம்பர் 17, 2025) ஹைதராபாத்தில் உள்ள ஐஐடி பல்கலைக்கழகத்திற்கு சென்று இருக்கிறார். அங்கே மாணவர்களுடன் உரையாடலை மேற்கொண்டு இருக்கிறார். பல்கலைக்கழகத்திற்குச் சென்று மாணவர்களுடன் உரையாடிய தொகுப்பை சிறிய வீடியோவாக தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவாக உபாசனா காமினேனி கொனிடேலா பதிவேற்றியுள்ளார்.

https://x.com/upasanakonidela/status/1990407135751221745?t=g0wrRxCE9zEBOxGmwVoLLQ&s=19

அந்தப் பதிவில், “இங்கு எத்தனை பேர் திருமணம் செய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு பெண்களை விட ஆண்கள் அதிகமாக கைகளை உயர்த்தினர். இதிலிருந்தே பெண்கள் தங்களுடைய வாழ்வில் தொழில் சார்ந்து மிகவும் தெளிவாக இருப்பதை உணர முடிகிறது. இதுதான் முற்போக்கான புதிய இந்தியா.

30 வயதை அடைவதற்கு முன்பே உங்கள் இலக்கை சரியாக நிர்ணயங்கள், உங்களை நீங்கள் சரியாகப் பார்த்துக் கொள்ளுங்கள், தொழில் சார்ந்த விஷயத்தில் நல்ல உயரத்தை அடையுங்கள், உங்களை யாராலும் தடுக்க முடியாது”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உபாசனா காமினேனி கொனிடேலாவின் இந்தப் பதிவை சுட்டிக்காட்டி ஜோஹோ நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு பதில் பதிவை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “ இளம் தொழில் முனைவோர் அனைவருக்கும் ( ஆண் மற்றும் பெண் இருவருக்கும் ) நீங்கள் உங்களுடைய 20களிலேயே சீக்கிரம் திருமணம் செய்து கொண்டு குழந்தையை பெற்றுக் கொள்ளுங்கள் என்று வலியுறுத்துகிறேன்.

சமூகத்திற்கும், உங்கள் சொந்த மூதாதையர்களுக்கும் மக்கள்தொகை கடமையைச் செய்ய வேண்டும் என்று நான் உங்களிடம் கூறுகிறேன். இந்தக் கருத்துக்கள் விசித்திரமாகவோ அல்லது பழமையானதாகவோ தோன்றலாம், ஆனால் இந்தக் கருத்துக்கள் மீண்டும் எதிரொலிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.” என்று அழுத்தம் திருத்தமாக ஸ்ரீதர் வேம்பு குறிப்பிட்டுள்ளார்.

https://x.com/svembu/status/1990977698735476962?t=ZQUOpiYENCU5wuLkKoC57A&s=19

ஸ்ரீதர் வேம்பு பதிவிட்டுள்ள இந்த பதிவிற்கு பெண் ஒருவர் ரிப்ளை செய்துள்ளார். அந்த ரிப்ளையில், “ சரி 20 வயதுகளில் நான் குழந்தை பெற முடிவு செய்துவிட்டால், இந்த சூழ்நிலையில் மகப்பேறு விடுப்பு மற்றும் குழந்தை பராமரிப்பு என என்னுடைய தொழில் சார்ந்த வாழ்க்கையில் ஒரு பின்னடைவு ஏற்படாதா. அது மட்டும் இன்றி குழந்தையை பெற்றுக் கொள்வது மட்டும் வாழ்வின் ஒரே முக்கிய நோக்கம் அல்ல”, என்று கூறியுள்ளார்.

இவரைத் தொடர்ந்து ஆண் ஒருவர், “28 வயதிற்குள் திருமணம் செய்து 3 குழந்தைகளை பெற்று ஒருவேளை விவாகரத்து பெற்று விட்டால் என்ன ஆகும்”, என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்த இரண்டு பதிவிற்கும் ஸ்ரீதர் வேம்பு, “வாழ்க்கை ஒரு பந்தயம் அல்ல. மெட்டா நிறுவனத்தின் சேர்மன் மற்றும் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க் என்னை விட 20 வயது குறைவானவர். அவரை ஒப்பிட்டு பார்த்தால் நான் என்னுடைய வாழ்க்கையில் தோல்வி அடைந்தவனா ?. அப்படி இல்லை வாழ்வில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. 30 வயது கூட நிறைய பேருக்கு ஒரு புதிய தொடக்கமாக அமைந்துள்ளது. லாரி எலிசன் 31 வயதில்தான் தன்னுடைய தொழில் வாழ்க்கையை தொடங்கினார். 28 வயதிற்கு பின்பு கூட நிறைய நேரம் இருக்கிறது. உங்களால் நீங்கள் நினைத்த இலக்குகளை அடைய முடியும்”, என்று பதில் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version