தமிழ்நாட்டில் 95.16% SIR விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அடுத்தாண்டு தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற் உள்ளதை முன்னிட்டு, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் கடந்த 4ம் தேதியில் இருந்து மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றது. இந்தப் பணிகள் டிசம்பர் 4ம் தேதியுடன் நிறைவடைவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புதிய வாக்காளர்களை சேர்த்தல், முகவரி மாற்றம், பெயர் நீக்குதல், பிழைதிருத்தம் போன்ற பணிகள் விரைவாக நடைபெறுவதால், மாநிலம் முழுவதும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
புதிய வாக்காளர்கள் சேர்க்க படிவம் 6-ஐயும், பெயர் நீக்கலுக்கு படிவம் 7-ஐயும், விபர திருத்தத்திற்கு படிவம் 8 மற்றும் முகவரி மாற்றத்திற்கு படிவம் 8A ஆகியவற்றை பூர்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான விண்ணப்பங்கள் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நவம்பர் 19ம் தேதி மாலை 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 6,10,08,906 வாக்காளர்களிடம் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது, சதவீத அடிப்படையில் 95.16 சதவீத வாக்காளர்களுக்கு SIR பணிகளுக்கான விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
