திருப்பூர் பூங்கா சாலை மற்றும் குமரன் சாலை இணைப்பு பகுதியில் சுரங்க பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக குழி தோண்டப்பட்டு பால பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதில் தண்ணீர் ஊற்று ஏற்பட்டு நீர் நிறைந்து காணப்படுகிறது.

இன்று காலை இதில் இளைஞர் ஒருவர் சடலமாக மிதப்பது கண்டு பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் திருப்பூர் தெற்கு போலீசார் அவர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அவர் பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியை சேர்ந்த முகமது சல்மான் 24 என்பதும் திருப்பூர் லட்சுமி நகரில் தங்கி ராயபுரம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

பனியன் நிறுவனத்தில் சென்று விசாரித்த போது நேற்று அவர் வரவில்லை என தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது அவருக்கு வந்த அழைப்பில் இந்தியில் பேசிய நபர் பெண்களிடம் அரைகுறை ஆடையுடன் ஆபாசமாக பேசியதாகவும் அதற்காக கைது செய்யப் போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

முதலில் முகமது சல்மான் மறுத்த நிலையில், அவர்கள் முகமது சல்மான் அரைகுறை ஆடைகளுடன் பெண் ஒருவருடன் பேசுவது போன்ற வீடியோவை அனுப்பியுள்ளனர். அதனை கண்ட பிறகு பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்ட பெண்னிடம் முகமது சல்மான் பேசியதாக ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால் அந்த கும்பல் அவரை தோப்புக்கரணம் போட வைத்தும், தான் சொல்லும் எண்ணுக்கு பணம் அனுப்பினால் விட்டுவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் மன உளைச்சல் அடைந்த முகமது சல்மான் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தண்ணீர் நிறைந்த பால பணி குழியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக முகமது சல்மான் உடலை பரிசோதனைக்கு அனுப்பி வைத்த திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version