ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் குற்றம்சாட்டினார்.
சென்னை திருவான்மியூரில் பா.ஜ.க சார்பில் நடந்த ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பான கருத்தரங்கில் ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பங்கேற்றார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ்நாடு சித்தர்களின் பூமி என்றார்.
ஒரே நாடு , ஒரே தேர்தல் குறித்து பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக பவன் கல்யாண் குற்றம்சாட்டினார். இந்த விஷயத்தில் சிலர் இரட்டை வேடம் போடுவதாகவும் அவர் தெரிவித்தார். ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைருமான கருணாநிதி ஆதரித்ததாகவும், ஆனால் தற்போதை முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் அதனை எதிர்ப்பதாகவும் பவன் கல்யாண் குற்றம்சாட்டினார். இந்த முரண்பாடு ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். நெஞ்சுக்கு நீதியில் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கருணாநிதி ஆதரித்து குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டி பவன் கல்யாண், இப்போது தி.மு.க. இரட்டை வேடம் போடுவதாக தெரிவித்தார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை மூலம் தேர்தல் செலவுகளை குறைக்க முடியும் என்றும், ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் பொது மக்களிடம் பல்வேறு திட்டங்களை கொண்டு சேர்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து எதிர்க்கட்சிகள் தங்களுக்கு சாதகமான கருத்துகளை கூறி வருவதாக கூறிய பவன் கல்யாண், தேர்தலில் எதிர்க்கட்சிகள் தோற்றால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவிப்பதை சுட்டிக்காட்டினார். மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம் என எதிர்க்கட்சியினர் செயல்படுவதாகவும் பவன் கல்யாண் தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version