வாஷிங்டன்: அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று, பட்டம் பெற்ற பிறகு அங்கேயே தங்கி வேலைவாய்ப்பு தேடும் வெளிநாட்டு மாணவர்களுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும் ஒரு புதிய முன்மொழிவை டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுமார் ஒரு லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.95 லட்சம்) கட்டணம் வசூலிக்கும் திட்டம் குறித்து ஆலோசனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இந்தக் கட்டணத்தை மாணவர்களே நேரடியாகச் செலுத்த வேண்டுமா அல்லது அவர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்களா என்பது இன்னும் தெளிவாகவில்லை. இந்த முன்மொழிவு, H1B விசாக்களுக்கு ஒரு லட்சம் டாலர் கட்டணம் விதிக்கும் முந்தைய திட்டத்தை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து வந்துள்ளது.
F-1 விசா மூலம் படிப்பை முடிக்கும் சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் Optional Practical Training (OPT) திட்டத்துக்கு இந்தக் கட்டணம் பரிசீலிக்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்காவில் OPT திட்டத்தில் சுமார் 4.19 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
OPT என்பது மாணவர்கள் தங்கள் படிப்புத் துறைக்கு ஏற்ப அனுபவம் பெற அனுமதிக்கும் தற்காலிக வேலை அனுமதியாகும். படிப்புக்கு முன்பான Pre-completion OPT-யில் பகுதிநேர வேலை செய்யலாம். படிப்பு முடிந்த பின்னர் வழங்கப்படும் Post-completion OPT-யில் முழுநேர வேலை செய்ய முடியும். பொதுப் பிரிவு மாணவர்களுக்கு 12 மாதங்களும், STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) பிரிவு மாணவர்களுக்கு கூடுதல் 24 மாத நீட்டிப்புடன் மொத்தம் 36 மாதங்கள் வரை வாய்ப்பு உள்ளது.
இந்திய மாணவர்களுக்கு இது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களில் 3.3 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் பயில்கின்றனர். பெரும்பாலானோர் கடன் வாங்கி படிப்பை முடித்து, அங்கு வேலை செய்து கடனைத் திருப்பிச் செலுத்தும் நோக்கில் OPT-யை நம்பியுள்ளனர். மாணவர்கள் தாங்களே கட்டணம் செலுத்த வேண்டியிருந்தால் பலர் விலக நேரிடும்.
நிறுவனங்கள் செலுத்தினால், அவை உள்நாட்டு அமெரிக்கர்களை விரும்பி பணியமர்த்தலாம். இந்த முன்மொழிவு இன்னும் ஆரம்பக் கட்டத்தில்தான் உள்ளது. இருப்பினும், அது நடைமுறைக்கு வந்தால் அமெரிக்காவின் உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியர்களின் பங்களிப்பு கணிசமாகப் பாதிக்கப்படும் என்று கல்வியாளர்கள் அஞ்சுகின்றனர்.
