ஜம்மு – காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லாவின் விவாகரத்து வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. இருவரும் பரஸ்பரமாக பிரிந்து செல்வதாக கூறியதை அடுத்து விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா மற்றும் அவரது மனைவி பாயல் அப்துல்லா இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் அரதே அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடுகையில்,’நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் அரதே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு உமர் அப்துல்லா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடுகையில், இரு தரப்பினரும் ஒரு சமரசத்திற்கு வந்துவிட்டதாகவும், பரஸ்பர சம்மதத்தின் பேரில் தங்களது திருமணத்தை ரத்து செய்யக் கோரி அரசியலமைப்பின் 142-வது பிரிவின் கீழ் கடந்த ஜூலை 22 அன்று மனு தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
“அவர்கள் இருவரும் சுதந்திரத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். எல்லாம் முடிவாகிவிட்டது. சட்டப்பிரிவு 142-ன் கீழ் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாண்புமிகு நீதிபதிகளே, தாங்கள் விவாகரத்து வழங்கலாம்” என்று சிபல் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார். மேலும், மற்ற அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்
இதனைக் கவனத்தில் கொண்ட நீதிபதிகள் அமர்வு, “இது நல்ல விஷயம். இதற்கேற்ப தீர்வு கண்டு, இந்தத் தகவலை எங்கள் உத்தரவின் ஒரு பகுதியாக ஆக்கி வழக்கை முடித்துவைப்போம்” என்று தெரிவித்தது.
முன்னதாக, தனக்கு விவாகரத்து வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்ததை எதிர்த்து உமர் அப்துல்லா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். மனைவிக்கு எதிரான கொடுமை அல்லது கைவிடுதல் குற்றச்சாட்டுகளை அவர் நிரூபிக்கத் தவறிவிட்டார் என்று கூறி, அவரது விவாகரத்து மனுவைத் தள்ளுபடி செய்த 2016 ஆம் ஆண்டு குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை, டெல்லி உயர் நீதிமன்றம் 2023 டிசம்பர் 12 அன்று உறுதி செய்திருந்தது.
குடும்ப நீதிமன்றத்தில் உமர் அப்துல்லா வாதிடுகையில், தங்களது திருமணம் மீள முடியாதபடி முறிந்துவிட்டதாகவும், 2007-ஆம் ஆண்டு முதல் தாம்பத்திய உறவில் ஈடுபடாமல் 2009-ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். 1994 செப்டம்பர் 1-ல் திருமணம் செய்துகொண்ட தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக நீண்ட காலமாகப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உமர் அப்துல்லா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற மத்தியஸ்த மையத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், தற்போது இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் பிரிவதாக தெரிவித்ததையடுத்து அவர்களுக்கு உச்ச நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது.

