குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தில் இயங்கும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா அரசு உறைவிடப் பள்ளியில் இரவு உணவு உண்ட மாணவிகளுக்கு உணவு ஒவ்வாமை காரணமாக தீவிர உடல்நலக் குறைவு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பள்ளி விடுதியில் 215 மாணவிகள் தங்கிப் பயின்று வருகின்றனர்.

நேற்றிரவு சப்ஜி, கோதுமை ரொட்டி, கிச்சடி மற்றும் கீர் ஆகிய உணவுகள் வழங்கப்பட்டன. இந்த உணவை உண்ட பிறகு இன்று காலை பல மாணவிகளுக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றின. இதனால் 147 மாணவிகள் உடனடியாக சூடா சமூக சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 45 பேரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், சுரேந்திரநகர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மாவட்ட தலைமை சுகாதார அதிகாரி டாக்டர் பி.ஜி. கோஹில் இது குறித்து கூறுகையில், “பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் தற்போது நிலையான உடல்நிலையில் உள்ளனர். எந்தவித உயிராபத்தும் இல்லை. உணவு மாதிரிகள் உடனடியாக சேகரிக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வு முடிவுகள் விரைவில் வெளியாகும்” என்றார். இச்சம்பவம் பெற்றோரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பெற்றோர் கூறுகையில், “எனது இரண்டு மகள்களும் இப்பள்ளியில் படிக்கின்றனர். ஒரு மகளுக்கு உடல்நிலை மிகவும் மோசமாகி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். ஆனால் பள்ளி நிர்வாகம் எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இது மிகவும் வருத்தமளிக்கிறது” என்று குற்றம்சாட்டினார். பல பெற்றோர்கள் பள்ளி நிர்வாகம் தங்களுக்கு நேரடியாக தகவல் தெரிவிக்காததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் விடுதி மாணவிகளின் நலன் குறித்து அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மாணவிகளின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் உறுதி அளித்துள்ளனர். இந்தச் சம்பவம் அரசு உறைவிடப் பள்ளிகளில் உணவு தரம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version