தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைச்சரவையில் முக்கிய மாற்றங்களைச் செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது முதல்வர் உள்பட 34 அமைச்சர்கள் பதவி வகிக்கும் நிலையில், சர்ச்சைகளில் சிக்கிய இரு அமைச்சர்களை நீக்கி, அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவிய மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், விசிக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அமைச்சர்களுக்கு கூடுதல் துறைகள் வழங்கும் பரிசீலனையும் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
அமைச்சரவை முழுமையாக நிரம்பியுள்ளதால், புதிய அமைச்சரை நியமிக்க ஒருவரை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கட்சியில் அதிமுகவின் மூத்த தலைவர்கள் பலர் இணைந்துள்ள நிலையில், அவர்களுக்கு உரிய பொறுப்புகளை வழங்கி கட்சியை வலுப்படுத்தவும், அரசின் நற்பெயருக்கு பங்கம் விளைவிக்கும் சர்ச்சைகளைத் தவிர்க்கவும் முதல்வர் விஜய் இந்த முடிவுக்கு வருவதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதற்கட்ட நடவடிக்கையாக, தாம்பரம் தொகுதி எம்எல்ஏ சரத்குமார் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆகியோரை நீக்குவது குறித்து தீவிர ஆலோசனை நடைபெறுகிறது. சரத்குமார் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டியின்போது போதைப்பொருள் பயன்படுத்தியதாக வெளியான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த விவகாரம் அரசுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெகதீஸ்வரி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியைச் சேர்ந்தவர். அரசியலுக்கு முன்பு ராக்கெட் ராஜாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை கிளப்பின. மேலும், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவுடன் மேடைப் பேனர் பெயர் வரிசை குறித்து ஏற்பட்ட கருத்து வேறுபாடு தொடர்பான வீடியோ வெளியானதும் கட்சி மேலிடத்தை அதிருப்தியடையச் செய்தது. இருவரது நடவடிக்கைகளும் கட்சியின் பிம்பத்தை பாதித்துள்ளதாக மூத்த நிர்வாகிகள் கருதுகின்றனர்.
இவர்களுக்கு பதிலாக, அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த விராலிமலை முன்னாள் எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர், கரூர் முன்னாள் எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர், அம்பை முன்னாள் எம்எல்ஏ இசக்கி சுப்பையா உள்ளிட்டோருக்கு அமைச்சர் பதவி வழங்க வாய்ப்பு உள்ளது. இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரே இந்த நியமனங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து அமைச்சர் விஜய் தமிழன், சிறுபான்மையினர் நல அமைச்சர் ஏ.எம்.ஷாஜகான் ஆகியோரின் பொறுப்புகளிலும் மாற்றம் செய்யப்படலாம். விசிகவின் வன்னியரசு (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை) மற்றும் லீக் அமைச்சருக்கு கூடுதல் இலாகா வழங்கி கூட்டணிக் கட்சிகளை திருப்திப்படுத்தும் யோசனையும் உள்ளது.
இந்த மாற்றங்கள் தற்போது பரிசீலனை கட்டத்திலேயே உள்ளன. தமிழகத்தில் உள்ள காலி தொகுதிகளுக்கு நான்கு மாதங்களில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், அதன் முடிவுகளுக்குப் பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தவெக மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாற்றங்கள் தவெக அரசின் இரண்டாவது ஆண்டில் வலுவான தொடக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
