புரட்சித்தலைவி ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவின் தலைமைப் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி வந்தபோது அவருடைய நாட்கள் எண்ணப்படுவதாக ஆரூடம் கணித்தவர்கள் ஏராளம் பேர். ஆனால் அவர்களின் நினைப்பில் மண்ணை அள்ளிப்போட்டு முழுதாக நான்கரை ஆண்டுகாலம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியில் இருந்தார் எடப்பாடி பழனிசாமி.

அதிர்ஷ்டவசமாக பதவிக்கு வந்தவர் என்று ஏளனம் பேசியவர்கள் பலரின் வாயை அடைக்கும் வகையில், தனது செயல்பாடுகளால் அட போட வைத்தார் எடப்பாடி பழனிசாமி. குடிமராமத்து எனும் ஒற்றைத் திட்டம் போதும் அவரது ஆட்சிகாலத்தின் மாண்பினை எடுத்துரைக்க. இத்தனை ஆண்டுகாலம் உரிய பராமரிப்பின்றி இருந்த தமிழக நீர்நிலைகளை சிறப்பாக மீட்டெடுத்து இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக அதனை மாற்றிக் காட்டினார். அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் நீட் தேர்வால் புறக்கணிக்கப்படும் சூழல் உருவானபோது ஆளுநரின் உத்தரவு வரும்வரை காத்திருக்காமல் தமிழக அரசின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி 7.5 சதவித உள்ஒதுக்கீட்டை கொண்டு வந்து கிராமப்புற மாணவர்களும் இன்று தோளில் ஸ்டெதெஸ்கோப் அணிந்து மருத்துவக் கல்லூரிகளில் நடைபோடுவதை சாத்தியமாக்கினார்.

ஒருபுறம் ஆட்சிக்கட்டிலை திறம்பட நடத்தியவர், உள்கட்சி அரசியலை புரட்சித்தலைவி அம்மா பாணியில் இரும்புக்கரம் கொண்டு அடக்கினார். தர்மயுத்தம் நடத்தியவர்கள், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையை கைப்பற்ற முனைந்தவர்களை தயவுதாட்சண்யம் பாராமல் கட்சியை விட்டு தூக்கினார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை தான், அது நான்தான் என்பதை உறுதியாக கூறியதோடு ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களும் அதனை ஏற்றுக் கொள்ளும்படி நடந்து காட்டினார்.
அதிமுக எனும் பேரியக்கத்தின் கட்சிக் கொடி, சின்னம் ஆகியவற்றை சட்டரீதியாக முடக்க முயன்றவர்களை உச்சநீதிமன்றம் வரை சென்றும், தேர்தல் ஆணையத்தில் போராடியும் மீட்டார். உண்மையில் 1989-ல் புரட்சித்தலைவி அவர்கள் அதிமுகவை மீட்டதற்கு ஒப்பானது இந்த செயல்.
2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தபோதும் அவர்களின் சக்திக்கேற்ப மட்டுமே தொகுதிகளை வழங்கினார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் அந்த கூட்டணியே வேண்டாம் என்றும் திடமுடன் முடிவு எடுத்தார். வழக்குகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சவில்லை.

அதிமுகவின் தலைமையை விமர்சித்த பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலையை அந்த பதவியில் இருந்து மாற்றச் செய்தார். பாஜகவின் அடிமையாக அதிமுக செயல்படுகிறது என்று கூச்சமில்லாமல் பேசியவர்கள், பாஜகவின் மாநிலத் தலைவர் பதவியை மாற்றச் செய்யுமளவுக்கு வல்லமை எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது என்று தெரிந்தபோது கப்சிப் என்று ஆனார்கள்.

2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆட்சிக்கட்டிலில் இருந்து இறக்குவதற்கு வலிமையான கூட்டணி தேவை என்பதை உணர்ந்து மிக சாதுர்யமாக அரசியல் கட்சிகளை தங்கள் பக்கம் வரச் செய்து வருகிறார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் பிணக்கு ஏற்பட்டதை புறந்தள்ளி 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முதலில் பாஜகவுடன் கூட்டணி மேற்கொண்டார். டெல்லிக்கு வேண்டுமானால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பாஜக தலைமை தாங்கலாம், தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை என்பதை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் விமர்சனங்களுக்கு முடிவுரை எழுதினார்.
வடமாவட்டங்களில் வாக்கு வங்கியை பலப்படுத்த பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வந்தார். தந்தை மகன் மோதலைத் தாண்டி பாமக என்றால் அது அன்புமணி தான் என்பது அனைவருக்கும் தெரியும். அதனை லாவகமாக கையாண்டு வன்னிய வாக்கு வங்கியை தக்க வைப்பதற்கான வேலைகளை செய்து முடித்துள்ளார்.
முன்னொரு காலத்தில் பகையாளி ஆனால் என்றும் பங்காளி தான் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை மசிய வைத்து தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வந்துள்ளார். பொது எதிரி திமுக தான் அதனை வீழ்த்துவதற்கு அனைத்து அரசியல் ராஜதந்திரங்களையும் கையாண்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. டிடிவி வருகையின் மூலம் தென்மாவட்டங்கள் மற்றும் முக்குலத்தோர் வாக்கு வங்கியும் முன்னெப்போதை விடவும் அதிகம் வசப்பட்டுள்ளது. டிடிவி, சசிகலாவின் ஆதரவையும் சேர்த்து பெற்று விடுவார் என்பதால் அதிமுக கூட்டணி அபார எழுச்சி பெற்றுள்ளது என்றே சொல்லலாம்.
இன்னும் கூட தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை சாத்தியப்படக் கூடும் என்றே பேசுகிறார்கள். அது நடந்துவிட்டால் எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்பதே உண்மை.
எடப்பாடி பழனிசாமி குறிது அன்று புரளி பேசியவர்கள், இன்று புல்லரித்து நிற்கிறார்கள். அனைவரையும் அசர வைக்கிறார், இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர்.
