2026ஆம் ஆண்டுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் பெறோர் பட்டியல் குறித்து திருமாவளவன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு “அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு ” ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் விசிக வழங்கி வருகிறது.

2022 ஆம் ஆண்டு முதல் கூடுதலாக ‘மார்க்ஸ் மாமணி’ விருதும் வழங்கப்படுகிறது.

முத்தமிழறிஞர் கலைஞர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கேரள முன்னாள்  முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தாராமையா, தி.க தலைவர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், தோழர் து.ராஜா, இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஏ.எஸ்.பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்ளிட்ட சான்றோர் பலருக்கு இதுவரை விசிக-விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்தவரிசையில் 2026 ஆம் ஆண்டுக்கான விசிக-விருதுகள் பெறும் சான்றோரின் பட்டியலை திருமாவளவன் வெளியிட்டுள்லார்.

இந்த ஆண்டுக்கான “அம்பேத்கர் சுடர்” விருது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் கே.சொக்கலிங்கத்துக்கும்,

“பெரியார் ஒளி” விருது மனித உரிமை போராளியும், , சமூக செயற்பாட்டாளருமான முத்த வழக்கறிஞர் ஹென்றி டிஃபேனுக்கும்,

மார்க்ஸ் மாமணி விருது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியனுக்கும்,

‘காமராசர் கதிர்’ விருது அய்யா வைகுண்டர் வழியில் சமயச் சீர்திருத்தப் பணியாற்றிவரும் பால .பிரஜாபதி அடிகளாருக்கும்

அயோத்திதாசர் ஆதவன் விருது சமூக செயற்பாட்டாளரும் தலித் மக்களின் உரிமைகளுக்காக சமரசமில்லாமல் போராடி வருபவருமான ரூத் மனோரமாவுக்கும்,

காயிதேமில்லத் பிறை விருது இந்திய தவ்ஹீத் ஜமாத்  மாநில துணைத் தலைவர் முகமது முனீருக்கும்,

செம்மொழி ஞாயிறு –  நாமக்கல்லை சேர்ந்த தமிழறிஞர் பொ. வேல்சாமிக்கும் வழங்கப்பட உள்ளதாக திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இந்த விருது விழா ஜூன் 15ஆம் தேதி நடத்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, ஜூலை 5ஆம் நாள், சென்னை-தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version