தமிழக அரசியலில் அதிமுக தொடர்ந்து சந்தித்து வரும் தோல்விகளும், உள்கட்சி மோதல்களும் கட்சியை பலவீனப்படுத்தியுள்ளன. கட்சியின் உயர் நிர்வாகிகளில் 32 சதவீதத்தினர் இதுவரை விலகிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மற்றும் திமுகவில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மீண்டும் படுதோல்வியை சந்தித்தது. எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்ததோடு, கட்சியின் வாக்கு வங்கியும் கணிசமாகக் குறைந்தது. கடந்த தேர்தலில் 169 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக, 65 இடங்களை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது. மீதமுள்ள இடங்களில் 19 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. ஒரு தொகுதியில் மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு கூட பெறத் தவறியவர்களுக்கு டெபாசிட் திரும்பக் கிடைக்காது எனும் தேர்தல் ஆணைய விதியின்படி இந்த நிலை ஏற்பட்டது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவின் அதிர்ஷ்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. 2011 மற்றும் 2016ல் தொடர்ச்சியாக ஆட்சியைத் தக்கவைத்த அதிமுக, 2021ல் தோல்வியைத் தழுவியது. 2026 தேர்தலிலாவது வெற்றி பெறும் என எதிர்பார்த்த தொண்டர்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தல்கள் என அனைத்திலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தோல்வியே மிஞ்சியது.
ஒற்றைத் தலைமைப் பிரச்னையின்போது ஓ.பன்னீர்செல்வம் பக்கம் 7 சதவீத நிர்வாகிகள் சென்றனர். ஓபிஎஸ் தரப்பு தீர்க்கமான முடிவெடுக்காததால் அவர்களில் பெரும்பாலானோர் வேறு கட்சிகளுக்குச் சென்றனர். பின்னர் 2 சதவீதம் மட்டுமே அதிமுகவுக்குத் திரும்பினர். கடந்த தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய பொதுக்குழு கூட்டத்தைக் கோரிய சி.வி.சண்முகம், வேலுமணி உள்ளிட்டோரின் குரலுக்கு எடப்பாடி பழனிசாமி செவிசாய்க்கவில்லை. இதனால் 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு தெரிவித்தனர். ஆத்திரமடைந்த எடப்பாடி, அவர்களின் மாவட்டச் செயலாளர் பதவிகளைப் பறித்தார்.
இந்நிலையில், மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஆறு எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். வேலுமணி, கே.சி.வீரமணி, பாலகிருஷ்ண ரெட்டி போன்றோர் எடப்பாடி அளித்த பதவிகளை நிராகரித்து எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். சி.வி.சண்முகம் தனது நிலைப்பாட்டை எடப்பாடியே அறிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இந்த உடைப்பால் பல மாவட்டங்களில் முக்கியப் பதவிகளுக்கு நியமனங்கள் செய்ய முடியாமல் அதிமுக திணறி வருகிறது. தற்போது நடைபெறும் 7 இடைத்தேர்தல்களில் (திருச்சி கிழக்கு உள்ளிட்டவை) வெற்றி பெறும் வியூகத்தை எடப்பாடி பழனிசாமி வகுத்து வருவதாகக் கூறப்படுகிறது.அதிமுகவின் இந்த உள்கட்சி நெருக்கடி தொண்டர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கட்சியை மீட்டெடுக்க உடனடி நடவடிக்கைகள் தேவை என்கின்றனர் பலரும்.
