கோவையில் கனமழை எச்சரிக்கையை அடுத்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, கோவை ரயில் நிலையம் அருகே உள்ள கூட்செட் சாலையில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

அமைச்சர் முத்துசாமி பேட்டி:

ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:

 

“வானிலை ஆய்வு மையத்தின் கடுமையான மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, முதல்வர் அவர்கள் உடனடியாக முன்னேற்பாடுகளைச் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி, கோவை மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. கடந்த கால அனுபவங்களைக் கொண்டு, தண்ணீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு நிரந்தரத் தீர்வுகள் காணப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் மாநில திறன் மேம்பாட்டுக் கழக இயக்குனர் (முன்னாள் கோவை மாவட்ட ஆட்சியர்) ஆகியோர் இணைந்து, மேட்டுப்பாளையம் முதல் வால்பாறை வரை அனைத்து பகுதிகளிலும் சிறப்பான முன்னேற்பாடுகளைச் செய்துள்ளனர். ஒவ்வொரு துறையும் கடந்த முறை ஏற்பட்ட பிரச்சனைகளை மனதில் கொண்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

இன்றைக்கு ரெட் அலர்ட் ஆரஞ்சு அலர்ட்டாக மாற்றப்பட்டுள்ள போதிலும், நாளைய தினம் மழை சற்று கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், அதை எதிர்கொள்ளும் வகையில் அதிகாரிகள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். முதல்வர் அவர்கள் தொடர்ந்து அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், ஆணையர் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து நிலைமையைக் கண்காணித்து வருகிறார்.

 

90 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அங்கு மருத்துவர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு முகாமிற்கும் தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வால்பாறைக்கு ஒரு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு, அங்குள்ள பாதிப்புகள் உடனடியாகக் கவனிக்கப்படும்.

 

பொதுமக்களுக்கு எச்சரிக்கை:

மழை பாதிப்பு குறித்த தகவல்களைத் தெரிவிக்கத் தொடர்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளன. வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத் துறை, குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. கடந்த முறை ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. பொதுமக்கள் மழையின் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக, குப்பைகளை சாக்கடைகளில் போடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இதுவே அடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணமாகும். இருப்பினும், மாநகராட்சி அடைப்புகளைத் தடுக்க சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.” என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version