கேரளாவில் தென்மேற்கு பருவமழை வெளுத்துக் கட்டி வரும் நிலையில், இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை காரணமாக பல பகுதிகளில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நிலச்சரிவு, மண் சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுந்ததால் வீடுகள், மின்கம்பங்கள், சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பலி எண்ணிக்கை மற்றும் பாதிப்புகள்
கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு, 16 ஆண்டுகளுக்குப் பிறகு மே 24-ம் தேதி தொடங்கியது. அன்று முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கேரளாவில் பெரும் வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
கனமழையால் கோழிக்கோடு மாவட்டம் தாமரைச்சேரி அருகே கூடாஞ்சேரியைச் சேர்ந்த விஜி சந்திரன் – ஷீபா தம்பதியினரின் மகன்களான நிதின் (13), இவின் (11) இருவரும் அரக்கல்படித்தோடு என்ற இடத்தில் உள்ள ஓடையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பலத்த காற்று காரணமாக மரக்கிளை உடைந்து மின்கம்பியில் விழுந்ததில், மின்கம்பி அறுந்து சிறுவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஓடைக்குள் விழுந்தது. தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து சிறுவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.
இதேபோல், கோழிக்கோடு, ஆலப்புழா ஆகிய மாவட்டங்களிலும் மழை பாதிப்பு காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக மழை பாதிப்புக்கு நேற்று வரை 10 பேர் பலியாகியுள்ளனர்.
நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள்
பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான மரங்கள் சாலைகள் மீதும், மின்கம்பங்கள் மீதும், வீடுகள் மீதும் முறிந்து விழுந்துள்ளன. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தொடர்ந்து அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பலத்த காற்று மற்றும் மரங்கள் முறிந்து விழும் சம்பவங்கள் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
எச்சரிக்கை நிலைகள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் மூடல்
இன்று கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு அதிக கனமழைக்கான “ரெட் அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது. திருச்சூர், மலப்புரம் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு “ஆரஞ்சு அலர்ட்” விடுக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் “மஞ்சள் அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது.
இடுக்கி மாவட்டத்தைப் பொருத்தவரை இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களான மூணாறு, தேக்கடி, வாகமன், இடுக்கி என அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. இரவு நேர வாகனப் பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. நிலச்சரிவு ஏற்படும் ஆபத்துள்ள பகுதிகளில் வசிக்கும் பொது மக்களும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.