இந்திய விண்வெளி வரலாற்றில் முதன்முறையாக, தனியார் நிறுவனம் தயாரித்த ‘விக்ரம்-1’ ராக்கெட் இன்று (ஜூலை 18) விண்ணில் ஏவப்பட உள்ளது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஆய்வு மையத்திலிருந்து சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு இந்த ராக்கெட் ஏவப்பட உள்ளது. ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ எனும் தனியார் நிறுவனம் இந்த ராக்கெட்டை உள்நாட்டிலேயே வடிவமைத்துள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்திற்கு ‘ஆகமன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 24 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட், நான்கு நிலைகளைக் கொண்டது. இதில் உள்ள என்ஜின்கள் முப்பரிமாண (3D) அச்சுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டவை. இது 350 கிலோ வரையிலான செயற்கைக்கோள்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது. இந்த ராக்கெட் புவியின் தாழ்வட்டப் பாதையில் பல்வேறு நிறுவனங்களின் ஆய்வுக் கலன்களை நிலைநிறுத்த உள்ளது. இதன் மூலம் விண்வெளிச் சூழல் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, எதிர்கால செயற்கைக்கோள் திட்டங்களுக்கு வழிவகை செய்யப்படும்.

ராக்கெட் ஏவுதலுக்கான அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து, கவுன்ட்டவுன் தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ், இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானிகளான பவன் குமார் சந்தானா (CEO) மற்றும் நாகா பாரத் டாக்கா (COO) ஆகியோரால் 2018-ல் தொடங்கப்பட்டது. 2022-ல் விக்ரம்-எஸ் மூலம் துணைச் சுற்றுப்பாதை ஏவுதலில் வெற்றி பெற்ற இந்நிறுவனம், தற்போது உலக அளவில் வளர்ந்து வரும் சிறிய செயற்கைக்கோள் சந்தையை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த ஏவுதல் வெற்றியடைந்தால், அமெரிக்கா மற்றும் நியூசிலாந்துடன் இணைந்து இந்தியா தனியார் லேசான ராக்கெட் ஏவுதலில் இணையும். இது இந்திய விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை பெருமளவு ஊக்குவிக்கும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version