மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும்படி தனக்கு பணம், விமான டிக்கெட் மற்றும் ஹோட்டல் தங்கும் வசதி வழங்க முன்வந்ததாக நடிகை ஆகாங்க்ஷா புரி (Akansha Puri) குற்றம்சாட்டியுள்ளார்.
காக்ரோச் ஜனதா பார்ட்டி (CJP) சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவளிக்கும்படி தன்னை அணுகியதாகவும், அதற்காக சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பதிவிடுமாறும் கேட்டதாகவும் அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
“CJP மற்றும் ஜந்தர் மந்தர் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க எனக்கு பணம் வழங்க முன்வந்தனர். டெல்லிக்கு வர விமான டிக்கெட்டும் ஏற்பாடு செய்வதாகக் கூறினர். போராட்டம் குறித்து ரீல்ஸ் பதிவிடச் சொன்னார்கள். பல்வேறு உள்ளடக்க உருவாக்குநர்களுக்கும் (Content Creators) இதுபோன்ற சலுகைகள் வழங்கப்பட்டதாகத் தெரியும். ஆனால் நான் அதை நிராகரித்தேன். மாணவர்களுக்கு உண்மையான ஆதரவு அளிக்க வேண்டும்; அவர்களின் பிரச்சினையை மார்க்கெட்டிங் வாய்ப்பாக மாற்றக் கூடாது,” என்று ஆகாங்க்ஷா புரி கூறினார்.
“இது விளம்பரத்திற்கோ அல்லது மார்க்கெட்டிங்கிற்கோ பயன்படுத்தப்படும் விஷயம் அல்ல. மாணவர்களுக்கு ஆதரவளியுங்கள். அவர்கள் கூற விரும்புவதை கேளுங்கள். அதுவே அவர்களுக்கு தேவையானது,” என்றார்.
போராட்டத்தின் போது இளம் மாணவர்கள் தடியடி தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த காட்சிகளை பார்த்தபோது மிகவும் வேதனையாக இருந்ததாகவும், அந்தச் சூழலையும் சிலர் சமூக ஊடக உள்ளடக்கமாக மாற்றியது மேலும் வருத்தமளித்ததாகவும் அவர் கூறினார்.
“அழும் மாணவர்களையும், தடியடி தாக்குதலால் காயமடைந்தவர்களையும் பார்க்க மிகவும் வேதனையாக இருந்தது. ஆனால் அந்தச் சம்பவத்தை சிலர் சமூக ஊடக உள்ளடக்கமாக மாற்றியது இன்னும் அதிக வேதனையை ஏற்படுத்தியது. அவர்கள் நாட்டின் எதிர்காலம். தங்களது கருத்துகளை முன்வைக்கும் உரிமை அவர்களுக்கு உள்ளது. எனவே தயவுசெய்து அவர்களுக்கு ஆதரவளியுங்கள்,” என்று அவர் தெரிவித்தார்.
பாலிவுட் நடிகர்கள் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், “ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற வகையில் ஆதரவு தெரிவிக்கிறார்கள். யாராவது அதிகமாக ஆதரவு தெரிவித்தால் ‘விளம்பரத்திற்காக செய்கிறார்கள்’ என்பார்கள்; குறைவாக செய்தாலும் விமர்சிப்பார்கள். எனவே ஒவ்வொருவரும் தங்களது வழியில் உதவ முயற்சிக்கிறார்கள்,” என்றார்.
