இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் பிற மனிதர்களுடன் உரையாடுவதை தாண்டி செயற்கை நுண்ணறிவுடன் தான் அதிகம் உரையாடி வருகின்றனர். தங்களுக்கு இருக்கக் கூடிய அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் இன்றைக்கு செயற்கை நுண்ணறிவு பதில் கூறி வருகிறது. இந்த செயற்கை நுண்ணறிவு மனித குலத்திற்கு வளர்ச்சி என்றாலுமே, எதிர்காலத்தில் அதே மனித குலத்திற்கு பாதிப்பையும் ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து நடிகரும், எம்.பியுமான கமல்ஹாசன் எச்சரிக்கை ஒன்றை கல்லூரி நிகழ்ச்சியின் போது பேசியிருந்தார். அதாவது,
“ தமிழகத்தில் உள்ள ஒரு கல்லூரி விழாவில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன், சாட்ஜிபிடி போன்ற ஏஐ கருவிகளைப் பயன்படுத்துவதில் மாணவர்கள் காட்டும் அதிகப்படியான ஆர்வத்தைக் குறித்து எச்சரித்தார்.
சுற்றுச்சூழல் பாதிப்பு: ஏஐ தளங்களில் நாம் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பின்னால் பெரும் அளவிலான மின்சாரமும், கணினிகளை குளிர்விக்க அதிகப்படியான தண்ணீரும் வீணாக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
“சாட்ஜிபிடியிடம் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்வியும், ஒரு டம்ளர் தண்ணீரை நுகர்வதற்குச் சமம்” என்று அதன் சுற்றுச்சூழல் தாக்கத்தை எளிய உதாரணத்துடன் விளக்கினார். “தேவையான கேள்விகளை மட்டும் ஏஐ-யிடம் கேளுங்கள். மற்றபடி, உங்களுக்கு அருகில் இருக்கும் நண்பர்களிடம் பேசி விடை தேடுங்கள். அந்தத் தொழில்நுட்பத்தை விட அதிகமாகத் தெரிந்த மனிதர்கள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள்,” என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தார்.
இதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நடிகை ஸ்ருதிஹாசன், தந்தை பேசிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, அதற்கு 100 எமோஜியை பதிவிட்டுள்ளார். மேலும், ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தும் நீரின் அளவு குறித்த தரவுகளையும், “ஏஐ-யை விட மனிதர்களின் திறமைக்கு இன்னும் மதிப்பு கொடுப்பவராக இருந்தால் பின் தொடருங்கள்” என்ற வாசகத்துடன் கூடிய வீடியோவையும் பகிர்ந்து மனித உழைப்பின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
