கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி 59,724 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி. செந்தில்குமார் 57,453 வாக்குகள் பெற்ற நிலையில், 2,271 வாக்குகள் வித்தியாசத்தில் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த வெற்றியை எதிர்த்து, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் கே. பிரகாசம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மற்றும் அவர் தொடர்புடைய குற்ற வழக்குகள் குறித்த முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை என்றும், அரசு நிலம் வாங்கியது தொடர்பாக கட்டாயமான தடையில்லா சான்றிதழும் இணைக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்த குறைபாடுகளை சுட்டிக்காட்டி சுமார் 60 பக்கங்களைக் கொண்ட ஆட்சேபனை மனு தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தபோதும், அதை முறையாக பரிசீலிக்காமல் நிராகரித்ததுடன், நிராகரிப்புக்கான காரணங்களையும் தெரிவிக்கவில்லை என மனுதாரர் கூறியுள்ளார்.

இதனால், தேர்தல் அதிகாரி தனது கடமையை முறையாக செய்யத் தவறியதாகக் கூறி, அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், விதிமுறைகள் மீறப்பட்ட நிலையில் நடைபெற்ற தேர்தலில் செந்தில் பாலாஜியின் வெற்றியை செல்லாது என அறிவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.எம். பாபு முருகவேல் தாக்கல் செய்துள்ள இந்த தேர்தல் மனு, விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version