அதிமுக – பாஜக கூட்டணி அமைத்த பின்பு நடக்கும், தேர்தலுக்கான முதல் நகர்வாக இரு கட்சிகளும் செவ்வாய்க்கிழமையான  (டிச.23) முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அப்பேச்சுவார்த்தையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் குறித்தும் அதன் பின்னணியில் போடப்படும் அரசியல் கணக்குகள் குறித்தும் பார்க்கலாம்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் அதிமுக தரப்பிலிருந்து பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், மூத்த தலைவர் கே.பி முனுசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர். பாஜக தரப்பில், தமிழக சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இணை பொறுப்பாளர்களான சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அர்ஜூன்ராம் மெக்வால் மற்றும் சிவில் விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் முரளிதர் மோகல் ஆகியோருடன் மத்திய இணை அமைச்சர் எல் முருகன், பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்திற்கு முன்பாக இரு தரப்பும் தங்களது கட்சி நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்திவிட்டே வந்திருந்தினர்.

 

சுமார் ஒருமணி நேரம் நடந்த இப்பேச்சுவார்த்தையின் போது, திமுகவை எவ்வாறு வீழ்த்துவது? அதிமுக, பாஜக பலமாக உள்ள தொகுதிகள் எவை எவை? ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோரை கூட்டணிக்குள் கொண்டு வருவது மற்றும் அனைவருக்குமான தொகுதிகள் உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் கூட்டணி பங்கீட்டை பொறுத்தவரை, பாஜக தனக்கான தொகுதிகள் குறித்து முதலில் அழுத்தமாக பேச தொடங்கியிருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை, அதிமுக 28 தொகுதிகளில் இரண்டாம் இடத்தை பெற்றிருந்தது. பாஜக கூட்டணி 11 தொகுதிகளில் இரண்டாம் இடத்தில் இருந்தது. அதில் குறிப்பாக 24 இடங்களில் போட்டியிட்ட பாஜக, 9 இடங்களில் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தது. அப்பாராளுமன்ற தொகுதிகளிலுள்ள சட்டமன்ற தொகுதிகள் வாரியாக பாரத்தால் சுமார் 80 தொகுதிகள் வரை பாஜக கூட்டணி இரண்டாம் இடத்தில் இருந்தது. அது நாடாளுமன்ற தேர்தல் முடிவு தான் என்றாலும், அத்தகைய நிலையை கெட்டியாக பிடித்துக்கொண்ட பாஜக அதனை பிரதானப்படுத்தியே பேசியிருக்கிறது. அதன் அடிப்படையில் 40 சீட்டுகளை கேட்டதாக சிலர் பேசி வருகின்றனர்.

இதையடுத்து சொல்லப்படும் தகவல், தனக்காக பேசிய பாஜக அடுத்ததாக நகர்த்திய காய்கள் ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோரை கூட்டணிக்குள் கொண்டு வருவது என்பது தான். அதற்கு இ.பி.எஸ் சம்மதம் தெரிவித்ததாக காலை முதலே செய்திகள் வெளியாகிவரும் நிலையில், அதனை இலைமறை காயாக கூட இ.பி.எஸ் உறுதிப்படுத்தவில்லை. அதிமுகவினர் யாரும் அதுபற்றி வாய்திறக்கவில்லை. இறுதியாக, இப்பேச்சுவார்த்தையில் அதிமுகவிற்கு 170 இடங்கள், பாஜகவிற்கு 23, பாமகவிற்கு 23 தொகுதிகள் (இரு தரப்புக்கும்) ஒதுக்க அதிமுக தரப்பில் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பன்னீர்செல்வம் அணிக்கு 3 தொகுதிகள் மற்றும் அமமுகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்குவது குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால், எடப்பாடி பழனிசாமியோ செய்தியாளர் சந்திப்பில் தொகுதிப்பங்கீடு தெடர்பான கேள்வியை காதிலேயே வாங்கவில்லை. அவரின் பேச்செய்யும், நடவடிக்கைகளையும் பார்த்தால் மேற்கூறிய இணைப்பும் தொகுதிப் பங்கீடுகளும் உண்மையா? பொய்யா? என குழம்ப செய்கிறது. குறிப்பாக ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோரை கூட்டணிக்குள் கொண்டு வர சம்மதித்து விட்டாரா? என்பதில் குழப்பமே நீடிக்கிறது. ஒருவேளை, “எடப்பாடி பழனிசாமி அவர்கள் இருவரை இணைக்க முடியவே முடியாது” என திட்டவட்டமாக மறுத்துவிட்டாரோ என சந்தேகிப்பதற்கிணங்க, இன்றைய ஓ.பி.எஸ் & கோ-வின் பேச்சுக்கள் இருந்திருக்கின்றன.

அதாவது, இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம், “இபிஎஸ் உடன் இனி இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. இ.பி.எஸ் இருக்கும் வரை அதிமுகவுடன் இணைப்பு இல்லை. எதிர்வரும் தேர்தலில் இபிஎஸ்க்கு சரியான பாடத்தை புகட்டுவோம். எடப்பாடி ஒழிக.. ஒழிக. ஒழிக..” என திட்டவட்டமாக கூறியுள்ளார். இத்தனை நாளாக ஒன்றுபட்ட அதிமுக என பேசி வந்த அவர்களது இத்தகைய திடீர் பேச்சு, ‘எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வத்தின் இணைப்புக்கு ஓகே சொல்லவில்லை’ என்பதையே காட்டுவதாக புரிந்துகொள்ளப்படுகிறது. மேலும், இ.பி.எஸ்-க்கு பாடம் கற்பிப்போம் என கூறுவதை பார்க்கையில், தே.ஜ கூட்டணியிலும் இடம்பெறப்போவதில்லை என்ற செய்திக்கே வழிகோலுவதாக தெரிகிறது. ஆக, ஏற்கனவே பேசி வருவது போல் ஓ.பி.எஸ் தனிக்கட்சி ஏதும் ஆரம்பிக்க போகிறாரோ? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் முதல்வருடனான ஓ.பி.எஸ்-ன் சந்திப்புகளோடு தொடர்பு படுத்தி பார்த்தால், திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஓ.பி.எஸ் எடுக்க போகிறாரா? போன்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

மேற்கூறியது போல் நடக்கும் பட்சத்தில் அது தென் மாவட்டங்களில் தே.ஜ கூட்டணிக்கு சற்று பின்னடைவாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. மற்றொரு துருவத்தில் டி.டி.வி.தினகரனோ விஜய்க்கு வெண்சாமரம் வீசுவது போல் பேசி வருகிறார். அவர் என்ன சொல்லப்போகிறார் என தெரியவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சில தொகுதிகளில் தோல்வியடைய காரணமானவர் என்ற முறையில் டி.டி.வி.தினகரனும், தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளை கணிசமாக கொண்ட ஓ.பி.எஸ்-ம் இல்லாமல் போனால் இன்றைய சூழலில் தே.ஜ கூட்டணிக்கு அது இழப்பு தான். இதையறிந்து பாஜக இந்த நிலையை சரி செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version