தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுடன் நடைபெறவுள்ள இரு நாள் மாநாடு வெறும் சம்பிரதாய நிகழ்வாக மட்டும் இருக்குமா அல்லது மாநிலத்தின் பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காணும் சாதனை மாநாடாக அமையுமா என்ற கேள்வியை முன்வைத்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.

இதுதொடர்பாக ஒரு வீடியோ வெளியிட்டு அவர் கூறியிருப்பதாவது, மாவட்ட ஆட்சியர்கள், துறை செயலாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் நடைபெறும் இந்த மாநாடு மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், அதன் நோக்கம் தெளிவாக இருக்க வேண்டும் என்றார். ஒரு நாட்டின் வளர்ச்சியைத் திட்டமிடும் போது, ஆட்சியாளர்கள் முதலில் அந்த நாட்டின் உண்மை நிலையை அறிந்திருக்க வேண்டும். அந்த உண்மைகளை அறிவியல் ரீதியாக அளவிட்டு, புரிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தமிழ்நாட்டில் தினசரி நிகழும் நிலை தொடர்வதாகச் சுட்டிக்காட்டிய உதயகுமார், இந்த மாநாட்டில் இத்தகைய கொடுமைகளுக்கு தீர்வு காண த.வெ.க அரசு முன்வருமா என்று கேள்வி எழுப்பினார். நேற்று ராமநாதபுரத்தில் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி மாயமான பின்னர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டினார். இது முதலமைச்சருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்ற கும்பல் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட சம்பவத்தையும் அவர் நினைவூட்டினார். போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த இந்த மாநாட்டில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்றும் கேள்வி எழுப்பினார். “நாங்கள் வைக்கும் விமர்சனங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அல்ல. த.வெ.க அரசுக்கு வலிமை சேர்க்கும் நோக்கத்துடன், பிரச்னைகளுக்கு தீர்வு காணும் எதிர்பார்ப்புடன்தான் இவற்றை முன்வைக்கிறோம். மக்கள் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. காலையில் அனுப்பப்படும் கோப்புகளுக்கு மாலைக்குள் முதலமைச்சர் கையெழுத்திடும் செய்திகள் வரும் நிலையில், இந்த மாநாட்டில் உரிய தீர்வுகள் கிடைக்கும் என்று மக்கள் நம்புகின்றனர்” என்றார் உதயகுமார்.

கடந்த ஐந்தாண்டு திமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த விமர்சனங்களுக்கு தீர்வு காணப்படவில்லை என்றும், தற்போது த.வெ.க 35 சதவீத ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ள நிலையில், இந்த விமர்சனங்களை உள்வாங்கி செயல்பட்டால் தமிழகத்துக்கு விடிவு பிறக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்குவதாகவும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடப்பாடியார் தலைமையில் மக்கள் சேவையில் தொடர்ந்து ஈடுபடும் என்றும் உதயகுமார் வலியுறுத்தினார். இந்த இரு நாள் மாநாட்டில் முதலமைச்சர் விஜய் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version