தமிழக டிஜிபியை அதிமுக சட்டமன்ற கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், இன்பதுரை எம்பியும் சந்தித்து புகார் மனு அளித்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் அக்ரிகிருஷ்ணமூர்த்தி கூறியதாவது;-
காவல் துறையின் மூலமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே 30.5.2026 அன்று லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநரிடத்திலே புகார் மனு அளிக்கப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே வற்படுத்தப்பட்டது.
இதுவரை அந்த மனுவின் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையை கருத்தில் கொண்டு இன்று மீண்டும் தமிழக காவல்துறை தலைமை இயக்குனரை நேரடியாக சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளோம்.
தமிழகத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கிற குதிரை பேர நிழ்வுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இதில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளோம்.
அதிமுக தலைமை மேல் உள்ள அதிருப்தியால் வெளியேறுவதாக தவெக தரப்பில் தவறான தகவலை சொல்கிறார்கள். அதிமுகவின் உண்மையான நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் செல்லவில்லை. மாறாக தவெக ஆட்சியால் விலை பேசப்பட்ட ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இதுவரை சென்றிருக்கிறார்கள் .
அதிமுகவுக்குள் எந்தவிதமான உட்கட்சி பூசலும் இல்லை. பொதுச்செயலாளர் எடப்பாடியார். தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து மாவட்டத்தினுடைய நிர்வாகிகளையும் மாநில நிர்வாகிகளையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தொகுதிவாரியாக அழைத்து மாவட்ட வாரியாக அழைத்து ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்.
திமுகவும், அதிமுகவும் கூட்டணி வைக்க முயன்றதான குற்றச்சாட்டில் எந்தவிதமான உண்மையும் இல்லை. தீய சக்தி திமுகவை எதிர்த்து உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக. எந்த ஒரு காலகட்டத்திலேயும் திமுகவோடு எந்தவித பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை என அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
