தமிழக அரசியலில் முக்கிய மாற்றம் ஏற்படும் விதமாக, அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அணியில் இணைய முடிவெடுத்துள்ளார். தவெக தலைமை இந்த இணைப்புக்கு ஒப்புதல் அளித்திருந்தாலும், அவர் மாநில அளவிலான பொறுப்பை எதிர்பார்ப்பதால் பேச்சுவார்த்தைகள் தற்போது நீடித்து வருகின்றன.

தவெக ஆட்சி அமைத்த பிறகு அதிமுகவில் இருந்து பல முக்கிய புள்ளிகள் தவெகவுக்கு தாவியுள்ள நிலையில், சி.வி. சண்முகத்தின் இணைப்பு அதிமுகவுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. குறிப்பாக, விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் தவெகவுக்கு கணிசமான வாக்கு வங்கி மற்றும் அமைப்பு ரீதியான பலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுவரை அதிமுகவின் சிட்டிங் எம்எல்ஏக்களில் ஆறு பேர் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர்களான விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் வருகை அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்கள் அனைவரும் தவெக தலைவர் விஜய் தலைமையில் அணி திரள்வதன் மூலம் கட்சியின் வலிமையை அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது. தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் விடுத்த அழைப்பு கவனத்தை ஈர்த்துள்ளது. “அதிமுகவினரில் 90 சதவீதம் பேர் தவெகவில் இணைய வேண்டும்” என அவர் கூறியிருந்தார்.

ஒவ்வொரு மண்டலத்திலும் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த தவெக தலைமை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில் வட மாவட்டங்களை பலப்படுத்தும் நோக்கில் சி.வி. சண்முகத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சி.வி. சண்முகம் சமீபத்தில் அளித்த பேட்டியில், “நான் அதிமுகவில் இருக்கிறேனா இல்லையா என்பதை எடப்பாடி பழனிசாமிதான் சொல்ல வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

தவெக ஆட்சி அமைத்த பின்னர் அதிமுகவிலேயே தொடர முயன்ற அவர், அதிருப்தியில் உள்ள எம்எல்ஏக்களுக்கு பதவிகள் மீண்டும் வழங்கப்படாததால் ஏமாற்றம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கட்சியில் தொடர்வதில் பயன் இல்லை என முடிவுக்கு வந்துள்ளார்.சி.வி. சண்முகம் மட்டுமின்றி, சங்கராபுரம் எம்எல்ஏ ராகேஷ், திருத்தணி எம்எல்ஏ ஹரி, புவனகிரி எம்எல்ஏ அருண்மொழித் தேவன் உள்ளிட்டோரும் தவெகவில் இணைய தயாராகி வருகின்றனர்.

இவர்களில் சி.வி. சண்முகம் மட்டுமே மாநில அளவிலான பொறுப்பை கோரியுள்ளார். இந்தக் கோரிக்கை குறித்து தவெக தலைமை ஆலோசித்து வருகிறது.இடைத்தேர்தலுக்கு நீதிமன்றம் விதித்த தடை மற்றும் குதிரை பேர புகார்கள் காரணமாக தவெக தலைமை நிதானமான அணுகுமுறையை கடைப்பிடித்து வருகிறது. எனினும், அடுத்த இரு மாதங்களுக்குள் இணைப்பு விழா நடைபெற வாய்ப்புள்ளதாக இரு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.

சி.வி. சண்முகம் போன்ற மூத்த தலைவர்களின் வருகை தவெகவை வலுப்படுத்தும் அதேவேளையில், எதிர்க்கட்சியான அதிமுகவின் ஒட்டுமொத்த அமைப்பையும் பலவீனப்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். தமிழக அரசியல் சமன்பாடுகள் மேலும் மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படும் இந்த நகர்வு, வரும் நாட்களில் பெரும் விவாதங்களுக்கு வழிவகுக்கும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version