கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக சரிந்துள்ளது.
தமிழகத்தின் 38 மாவட்டங்களில் ஒவ்வொரு மாதமும் நிலத்தடி நீர்மட்டத்தை கணக்கிட்டு மாநில நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீர்வள தரவு மையம் வெளியிடும் ஜூன் மாத அறிக்கையில், கடந்த ஆண்டைவிட இந்தாண்டு பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்திருப்பது தெரியவந்துள்ளது.
அதன்படி, அரியலூரில் சராசரியாக 28.74 மீட்டர் ஆழத்தில் நிலத்தடி நீர் உள்ளது. அதைத் தொடர்ந்து கோவை (20.89 மீ.), கடலூர் (19.03 மீ.), நாமக்கல் (17.39 மீ.), புதுக்கோட்டை (16.60 மீ.), ஈரோடு (15.52 மீ.), கரூர் (13.52 மீ.), தஞ்சாவூர் (12.61 மீ.), திண்டுக்கல் (12.13 மீ.) ஆகிய மாவட்டங்களில் நீர்மட்டம் பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், வேலூர், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 6.77 மீட்டர், தர்மபுரியில் 5.55 மீட்டர், கரூரில் 5.42 மீட்டர், நாமக்கல்லில் 5.26 மீட்டர், கோவையில் 4.81 மீட்டர், ஈரோட்டில் 4.24 மீட்டர் அளவுக்கு நீர்மட்டம் சரிந்துள்ளது.
விவசாயத்திற்காக தமிழ்நாட்டில் சுமார் 21 லட்சம் ஆழ்துளைக் கிணறுகள் பயன்படுத்தப்படுகின்றன. மழைநீர் நிலத்திற்குள் ஊறும் வேகத்தைவிட பல மடங்கு அதிகமாக நீர் உறிஞ்சப்படுவதும், ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதும் நிலத்தடி நீர்மட்டம் சரிவதற்கான முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.
நிலத்தடி நீரை பாதுகாக்க அரசு மேற்கொள்ளும் நீர்மேலாண்மை திட்டங்களுடன், பொதுமக்களும் மழைநீர் சேகரிப்பை கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என நீர்வள நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
