இசக்கி சுப்பையாவின் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிலவும் அரசியல் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு ஒரு பின்னடைவைத் தொடர்ந்து மற்றொன்று ஏற்பட்டுள்ளது. முன்பு மூன்று அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா இன்று தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளார்.
நேற்று மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி எம்எல்ஏ எஸ். ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் தொகுதி எம்எல்ஏ பி. சத்தியபாமா ஆகியோர் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து ராஜினாமா கடிதங்களை ஒப்படைத்தனர். இவர்கள் அனைவரும் எஸ்.பி. வேலுமணி அணியைச் சேர்ந்தவர்கள் என்பதும், சமீபத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ராஜினாமாக்களை சபாநாயகர் விரைவில் ஏற்றுக்கொண்டதால் அதிமுகவின் சட்டமன்ற பலம் மேலும் குறைந்துள்ளது.
ராஜினாமா செய்த மூவரும் சபாநாயகரை சந்தித்த உடனேயே அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து தவெகவில் இணைந்தனர். தவெக தலைமை அலுவலகத்தில் அவர்களுக்கு உறுப்பினர் அட்டைகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் கடுமையாகக் கண்டித்துள்ளனர். “இது வெளிப்படையான குதிரைபேரம்” எனக் குற்றம் சாட்டியுள்ளனர். எதிர்க்கட்சிகளும் சபாநாயகரின் செயல்பாட்டை “அரசியல் அநீதி” என்று விமர்சித்துள்ளன.
இன்று அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தபோது சபாநாயகர் முதலில் டைப் செய்யப்பட்ட கடிதத்தை ஏற்க மறுத்தார். ராஜினாமா கைப்பட எழுதப்பட்டிருக்க வேண்டும் என வலியுறுத்தினார். உடனடியாக தன் அறைக்குச் சென்று கைப்பட எழுதிய புதிய கடிதத்தை சமர்ப்பித்த இசக்கி சுப்பையாவின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். இதன்மூலம் அதிமுகவிலிருந்து ராஜினாமா செய்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்ட உடனேயே அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் ஆனந்த் முன்னிலையில் இசக்கி சுப்பையா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
சபாநாயகரின் ராஜினாமா ஏற்பு நடைமுறைப்படி சரியானதுதான் என்றாலும், செயல்பாட்டில் நேர்மையின்மை இருப்பதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த தொடர் ராஜினாமாக்கள் அதிமுகவுக்குள் உள்ள உட்கட்சி பிரச்னைகளை மேலும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளன. தவெக அரசுக்கு ஆதரவு தரும் எம்எல்ஏக்களை இழுப்பது தொடர்பான குற்றச்சாட்டுகள் வலுப்பெற்றுள்ள நிலையில், சட்டமன்றத்தில் அரசியல் சூழல் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
