ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான மோதல்களால் உலக அளவில் மிக முக்கியப் போக்குவரத்துப் பாதையான ‘ஹார்முஸ் நீரிணையை’ தொடர்ந்து முடக்கப்பட்டு வரும் நிலையில், அதனைத் முழுமையாகத் தவிர்த்து புதிய வர்த்தகப் பாதையை உருவாக்க ஐக்கிய அரபு அமீரகம் திட்டமிட்டுள்ளது.

மூலோபாயத் திட்டத்தின் மூலம், அமீரகம் தனது கிழக்குக் கடற்கரையில் புதிய ஆழ்கடல் துறைமுகம் மற்றும் கன்டெய்னர் முனையத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. உலகின் மிக முக்கியமான கடல்வழிப் போக்குவரத்துப் பாதைகளில் ஹார்முஸ் நீரிணையும் ஒன்று. உலக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் சுமார் 20 சதவீதப் பங்கைக் கொண்ட இந்த குறுகிய கடல் எல்லை வழியேதான் அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் கப்பல்கள் செல்ல வேண்டும்.

ஆனால், சமீபத்திய பிராந்திய மோதல்களின் காரணமாக இந்த ஜலசந்தியை ஈரான் முடக்கியதால், அமீரகத்தின் முதன்மைத் துறைமுகமான ஜெபல் அலி துறைமுகத்தின் போக்குவரத்து 90 சதவீதம் வரை சரிந்தது. இந்த பாதிப்பில் இருந்து மீளவும், எதிர்காலத்தில் இத்தகைய புவிசார் அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்ளவும் துபாயைச் சேர்ந்த புகழ்பெற்ற துறைமுக மேலாண்மை நிறுவனமான ‘டிபி வேர்ல்டு’ புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

ஓமன் வளைகுடாவை ஒட்டியுள்ள அமீரகத்தின் கிழக்குக் கடற்கரை நகரான ஃபுஜைராவில் புதிய ஆழ்கடல் துறைமுகம் மற்றும் புதிய கன்டெய்னர் முனையம் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் சர்வதேச கப்பல்கள் ஹார்முஸ் நீரிணைக்குள் நுழையாமலேயே ஃபுஜைரா துறைமுகத்தில் சரக்குகளை இறக்கிவிட முடியும். அங்கிருந்து சாலை மற்றும் ரயில் போக்குவரத்து மூலமாக துபாய், அபுதாபி மற்றும் இதர வளைகுடா நாடுகளுக்குச் சரக்குகள் கொண்டு செல்லப்படும்.

இந்த புதிய துறைமுகப் பணிகள் இன்னும் 18 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹார்முஸ் நீரிணை திறந்திருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி கவலைப்படாமல், அதன் மீதான தங்களின் நம்பகத்தன்மையை பூஜ்ஜியமாக்குவதே இலக்கு என்று அமீரகத்தின் வெளிநாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் தானி அல் ஜேயூதி தெரிவித்துள்ளார். ஃபுஜைரா துறைமுக விரிவாக்கம் மட்டுமின்றி, திப்பா, கோர் ஃபக்கான் ஆகிய கிழக்குக் கரைத் துறைமுகங்களையும் மேம்படுத்தவும், புதிய குழாய் இணைப்புகள் மற்றும் ரயில் வழித்தடங்களை அமைக்கவும் பில்லியன் கணக்கிலான டாலர்களை முதலீடு செய்ய அமீரக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய துறைமுகத் திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது, வளைகுடாப் பிராந்தியத்தில் மிகப்பெரிய சரக்கு மற்றும் வர்த்தக மையமாக ஐக்கிய அரபு அமீரகம் தனது நிலையை மேலும் வலுப்படுத்தும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version